
வருகின்ற சில மாதங்களில் நம் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளைகளில் தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

வடமேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திகாவாரா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாஜக அரசின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின்போது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, ”இப்போதே 400 ரயில் நிலையங்களில் (குல்ஹாட்ஸ்) மண்குவளைகள் மூலம் தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற இன்னும் சில மாதங்களில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதே அரசின் திட்டமாகும்.

மேலும் இது (Plastic) பாலிதீன் இல்லாத இந்தியாவை நோக்கி ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். மண் குவளைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை. அதே நேரத்தில் இது ரயில்வே பயணிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று ஆகும். மேலும் மண்குவளைகள் தேவையின் பொருட்டு லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியும்”. என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் இது சென்ற 2004-ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராகப் பணியாற்றிய காலங்களில் ரயில் நிலையங்களில் சுட்ட மண் குவளைகளால் ஆன தேநீர் கப்களில் தேநீர் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.