2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களை நினைவு கூறுவதற்கு, தமிழ் மக்களுக்கு இடமளிக்காவிட்டால் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிளவு அடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும் என்று மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகின்ற நிலையில், தமிழர்களை போரில் இரந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்துவதை நீதிமன்றத்தினால் தடுக்க முடியாது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் கொழும்புவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. அதில் உரையாற்றிய சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்தாலும், அவர்களுக்கான உரிமையை வழங்க மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் முன்னிலையாகவுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஜே.வி.பி – யினரால் வீரர்களின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கிலும் மாவீரர் என்ற அனுஸ்டானம் உள்ளது. அதில் விடுதலைப்புலிகளின் தினம் என்று கூறுவதை விடவும், போரில் உயிரிழந்தவர்களை நினைத்து நினைவு கூர்கின்றனர்.
2009-ஆம் ஆண்டு போர் முடிந்த போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. அவர்களது உறவுகளை நினைவு கூர்வதற்கு அங்குள்ள பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் உரிமையிருக்கின்றது. அதற்காக நாங்கள் ஆதரவளிக்கின்றோம். அதற்காக எங்கள் மீது விடுதலைப்புலிகள் என்று முத்திரை பதித்தாலும் பிரச்சனை இல்லை. அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதை நீதிமன்றத்தினால் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தாலும் எங்கேயாவது ஓரிடத்தில் அவர்கள் தங்களது உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
ஸ்ரீலங்காவுக்கு இருக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டுக்களில் போர்குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. விடுதலைப் புலிகளை மறந்துவிடுவோம், ஆயிரக்கணக்கான தாய், தந்தையர், பிள்ளைகள், சகோதரர்களுக்கு அவர்களது இறந்த உறவினர்களை நினைத்து அஞ்சலி செலுத்த அனுமதி வழங்க வேண்டும். தென்னிலங்கையில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இடமளிப்பதுடன், வடக்கில் இவ்வாறு இனவாதமாக செயற்படுவதால் வருங்காலத்தில் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிரிவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.