தாயை அம்மா என்றும், தந்தையை அப்பா என்று, மேலும் தாத்தா, பாட்டி போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் கடந்து அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல் கொண்ட குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சியை பொறுத்த வரையில், குழந்தை வளரும் குடும்பச்சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் மனப்பான்மையின் தாக்கமும் அங்கு வளரும் குழந்தையிடம் இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும்கூட மிக முக்கிய தொடர்பு இருக்கிறது.
உயர்ந்த பொருளாதார பின்னணியில் இருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய சிறு குழந்தைகளுக்கு பல வகையான வண்ணங்கள், வடிவங்கள், செயல்பாடுகள் கொண்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள். அவைகள் எல்லாம், அந்த குழந்தைகளுக்கு அறிமுகமாகி, அவர்களுடைய மூளையில் பதிகின்றது. அதனால் அந்த குழந்தைகளின் பேசும்திறன் மேம்படுகிறது.
அவர்கள் அந்த புதிய பொருட்களோடு விளையாடும்போது, குழந்தைகளின் சிந்தனைத்திறனும் அதிகரிக்கிறது. அதுவே ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால், அத்தகைய வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த குழந்தைகளின் அறிவுத்திறனும் சராசரியாகவே இருக்கும் நிலை உருவாகும். அதனால் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத பெற்றோர் மிக முக்கியமாக தங்கள் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்துச்சென்று, அவ்ர்களுக்கு பல வித்தியாசமான பொருட்களை காணும் வாய்ப்பினை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
குழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிவுத்திறனை மேம்படுத்த பயன்படுத்தும். எல்லா குழந்தையும் நல்ல குழந்தைகள்தான். பெற்றோரின் வளர்ப்பு முறையில்தான் அவர்களின் அறிவுத்திறன் வளரும்.
சில வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளை பூங்காக்கள், விளையாட்டு மைதானம், கடைத்தெரு, திருவிழாக்கள், திருமணங்கள், உறவினர் வீடுகள் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். இவ்வாறு வளரும் குழந்தைகள் பல்வேறுபட்ட வெளியுலக காட்சிகளை காணும்போது அவர்களுக்குப் அதிக அனுபவம் கிடைக்கும்.
அதனாலும் அவர்களது அறிவுத்திறன் மேம்பாடும். குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமானது. அவர்கள் இயல்பில் அவர்களை விளையாட அனுமதிக்கவேண்டும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதாக கூறி குழந்தைகளை அவர்கள் இயல்புக்கு மாறாக வாட்டி வதைக்கும் செயலை பெற்றோர்கள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது.