
வெறும் 20 கிராம் சோளத்தை, வறுத்து 250 ரூபாய் பாப்கார்னாக மாற்றி பாக்கெட் கப்களில் போட்டு விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்த சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராததால், சினிமா நுழைவு சீட்டு கட்டணத்தை குறைத்தும், பாதிவிலைக்கு சோழப்பொரி தருவதாகவும் கூறி மக்களை கூசாமல் கூவி கூவி அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

500 கோடி ரூபாய் செலவழித்து எடுக்கப்பட்ட பிரமாண்ட படமாக இருந்தாலும் சரி, 5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட மாமி மசாலா படமாக இருந்தாலும், சென்னை மால்களில் அமைந்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா நுழைவு சீட்டின் விலையும் சரி, சோழபொரி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் சரி எப்போதும் படு உச்சத்தில் தான் இருக்கும்? அதாவது 20 கிராம் சோளத்தை பொறித்து 250 ரூபாய் மாடர்ன் பாப்கார்னாக விற்கும் அதிசயம் இந்த திரையரங்குகளில் தான் நடந்தது? உலகையே புரட்டிபோட்ட கொரோனா வைரஸ், பொழுது போக்கை வியாபாரமாக நடத்தும் திரையரங்கு உரிமையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடந்த திரையரங்குகளுக்கு கடந்த 10 ஆம் தேதிதான் திறக்கலாம் என்ற அரசு ஆணை கிடைத்தது. அதுவும் பாதி அளவு பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க அரசால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் முழுமையாக இன்னும் விலகாத காரணத்தாலும், திரையரங்குகளுக்கு ஜோடியாக செல்வோர் தனி தனியாகத்தான் அமரவேண்டும் என்ற விதி அமலில் இருந்து வருவதாலும், பகல் நேரங்களில் தியேட்டர் பக்கம் ஒதுங்க கூட ஆள் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்பு சினிமா நுழைவு சீட்டு கட்டணம், விளம்பரம் கட்டணம், சோழப்பொரி வசூல் என பணத்தை குவித்த திரையரங்கு உரிமையாளர்கள் காலை மற்றும் மதிய காட்சிகளை ரத்து செய்யும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சென்னையில் உள்ள பல அடுக்கு திரையரங்குகளுக்கு முன்பதிவு செய்து ரசிகர்கள் சென்ற காலம் போய், தற்போது பாதி விலைக்கு சொழப்போரி தருகிறோம் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வாருங்கள் என்று சமூக வலைத்தளமான டிவிட்டரில் கூவி கூவி அழைக்கும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கின்றனர், பெரும் மால்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள்.

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் பிகில் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான ஏ.ஜி.எஸ் சினிமாஸ் திரையரங்கில் நுழைவு சீட்டின் விலை 125 ரூபாய் எனவும், திரையரங்கில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையில் 50 சதமானம் தள்ளுபடி, அதாவது பாதி விலைக்கு சோழப்பொரி தருவதாகவும் அறிவித்து வருகின்றனர். முன்னனி நடிகர்களின் படங்களை முதல்காட்சியை பார்க்க முண்டியடித்த ரசிகர்களிடம் ஒரு நுழைவுசீட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 2000 ஆயிரம் வரை வசூலித்த காசி டாக்கீஸ் திரையரங்கில் ஒரு நுழைவுசீட்டு வாங்கினால் இன்னும் ஒரு நுழைவுசீட்டு இலவசம் என்று அறிவிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

போரூரில் அமைந்துள்ள ஜிகே சினிமாசிலும் ஒரு நுழைவு சீட்டு முன்பதிவு செய்தால் மற்றும் ஒரு நுழைவு சீட்டு இலவசம் என்று அறிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை வெளியிட்டதால், ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு திரையரங்கிற்கு படம் பார்க்க வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்த நிலையில் திரையரங்கு நிர்வாகம் கடந்த காலங்களில் சினிமா பார்க்க சென்ற ரசிகர்களிடம் சோழப்பொரிக்கு வாங்கிய தொகையை ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட 50 சதவீத இருக்கைகளுக்கு கூட அமரஆள் இல்லாமல் காத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை பார்த்த சிலர் “நாதஸ் திருந்திட்டானாம்” என்று ஒத்தை வரியில் கருத்து தெரிவித்து கேலி செய்து வருகின்றனர்.