“நிவர் புயல்” – இதையெல்லாம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், பேரிடர் மேலாண்மை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நிவர் புயல் காரணமாக மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியப் பெருங்கடல் தென் வங்காள விரிகுடாவின் மையப் பகுதிகளில் நவம்பர் 22 ஆம் தேதி அன்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் (இது அதிகபட்சம் 60 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும். நவம்பர் 23 ஆம் தேதி அன்று மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் (இது அதிகபட்சம் 65 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மேலும் நவம்பர் 24 அன்று மணிக்கு 55-65 கிமீ வேகத்திலும் (இது அதிகபட்சம் 75 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும். நவம்பர் 25 ஆம் தேதி அன்று மணிக்கு 80-90 கிமீ வேகத்திலும் (இது அதிகபட்சம் 100 கிமீ) வேகத்திலும் கடல் காற்று வீசக்கூடும். கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அதில் அறிவுறுத்தப்படுகிறது. தென் வங்கக் கடலில் உருவாகும் “நிவர்” புயல் தமிழக கரைகளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. இது காரைக்கால் – மாமல்லபுரம் இடையே வரும் 25 ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக பொதுமக்கள் எடுக்க வேண்டிய மிக முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள்,
புயலானது பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் மிகக்கடுமையாக சேதப்படுத்தக்கூடும். எனவே இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது மிக அவசியம். அதனால் குடிக்க உகந்த நல்லத்தண்ணீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். புயல் வருவதற்கு முன்பு, அனைவரது வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள இடங்களில் ஏதேனும் காய்ந்த மரங்கள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை உடனே அகற்ற வேண்டும்.
அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து மாத்திரைபொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். உறுதியான நல்ல கயிறுகள், புயல் காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள் அனைவரது வீடுகளிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பேட்டரியில் இயங்கும் மின் விளக்குகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் கொண்டை கடலை, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் என்று அத்தனை அவசர தேவைகளையும் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது வீட்டில் உள்ள அனைவரது அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தண்ணீர் படாத வகையில் பாலித்தின் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வீட்டின் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அரசால் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு அறிந்துக்கொண்டு, அதன்படி செயல்படலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.