மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் மீனவர்களிடையே பரவும் மர்ம நோய்? பெரும் பீதியில் மக்கள்? கொரோனா வைரஸ் தொற்று உலகில் பேரழிவை ஏற்படுத்தி பயமுறுத்தி வருகிறது. அதுவே இன்னும் ஒய்ந்த பாடில்லை. ஆனால் இப்போது மேலும் பல புதிய நோய்கள் பரவி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சி அளிக்க தொடங்கியுள்ளது.
பொலிவியாவில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்குப் பிறகு, இப்பொழுது மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் தலைநகரான டைகரில் மர்மமான முறையில் கடல் நோய் ஒன்று பரவியுள்ளது. கடலில் மீன்களை பிடிக்க போகும் மீனவர்களிடையே தொடர்ந்து மர்ம நோய் பரவி வரும் இந்நிலையில், அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் பீதி நிலவி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, இந்த புதிய நோயின் அறிகுறிகள் ஒரு இளம் மீனவரிடம் காணப்பட்டுள்ளது, அதன் பிறகு, அது கடகடவென நூற்றுக்கணக்கான அங்குள்ள மீனவர்களுக்கு பரவியது. இந்த மர்மமான நோய் குறித்து உறுதியான செய்தி எதுவும் இல்லை என்று செனகலின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் அறிகுறிகள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன என்றும், நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க ஐநூறுக்கும் அதிகமான மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செனகல் மீனவர்கள், உடல் சருமத்துடன் தொடர்புடைய இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. சருமத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்ட பிறகு அந்த பகுதியில் பல கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி வலி ஏற்படுகிறது. இதில் மிக முக்கியமான பயமுறுத்தும் உண்மை என்னவென்றால் அது மிக வேகமாக அங்கு பரவி வருகிறது.