புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் Actor Thavasi மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் தவசி.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சோ்ந்தவா் திரைப்பட நடிகா் தவசி (60). இவா், கிழக்குச் சீமையிலே படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி, தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வந்தார்.
ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபா் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற இவா், கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் “அண்ணாத்த” படத்திலும் நடித்துள்ளாா். இதற்கான படப்பிடிப்பு சென்ற மாா்ச் மாதம் முடிந்துள்ளது.
இவா், சென்ற ஆண்டு தேனி மாவட்டத்தில் காா் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவச் சிகிச்சைப் பெற்று மீண்டு வந்தார். அப்போதுதான் அவருக்கு உணவுக்குழாய் புற்று நோய் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கும் அவர் சிகிச்சைப் பெற்று வந்தாா். இருப்பினும், போதிய பணமின்றி சிகிச்சையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் நடிகர் தவசி. இதனிடையே தனக்கான மருத்துவச் சிகிச்சைக்கும், வறுமையில் வாடும் தனது குடும்பத்தினருக்கும் நிதியுதவி கோரிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினா் பா. சரவணன், தனது சொந்த மருத்துவமனையில் வைத்து நடிகா் தவசிக்கு இலவசமாக சிகிச்சையளிக்கத் தொடங்கினார். இவருக்கு, அங்கம்மாள் என்ற மனைவியும், பீட்டர்ராஜ் என்ற மகனும், முத்தரசி என்ற மகளும் உள்ளனா். இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை காலமானார்.