
இந்திய ரயில்வே துறைக்கு 55 நாள்களில் ரூபாய் .2,220 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த இழப்புக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள்தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிஜேபி ஆளும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய விவசாய மசோதாவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இந்த மசோதாவை எதிர்த்து இன்னும் பல போராட்டங்கள் நடந்துகொண்டு வருகின்றன. விவசாயிகள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில் விவசாயிகளால் அந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு விவசாயிகளின் போராட்டங்களால், நவம்பர் 19-ஆம் தேதிவரை, வடக்கு ரயில்வே ரூபாய் .891 கோடி வருவாயை இழந்துள்ளது என்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பால் இந்திய ரயில்வேயின் வருமானத்தின் அடிப்படையில் ரூ.2,220 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் பெற்ற தகவல்களின்படி, செப்டம்பர் 24 தேதி முதல் இன்றுவரை 55 நாள்களில் வருவாய் இழப்பு ரூ.825 கோடியை எட்டியுள்ளது. பயணிகள் ரயில்களை ரத்து செய்ததன் காரணமாக இந்த வருவாய் இழப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ரயில்வே பயணிகளின் வருவாயில் 67 கோடி உட்பட மொத்தம் ரூ.2,220 கோடியை இந்திய ரயில்வே இழந்துள்ளது. சரக்கு ரயில்கள் இயங்காததால் வடக்கு ரயில்வே நாளொன்றுக்கு ரூபாய் .14.85 கோடி இழப்பை சந்தித்துள்ளது. விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக சரக்கு ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் தினமும் சுமார் 30 ரேக் பொருள்கள் வந்து சேர்கின்றன. போராட்டங்கள் காரணமாக 3838 ரேக் பொருள்களை ரயில்களில் ஏற்ற முடியவில்லை. மேலும் விவசாயிகள் கிளர்ச்சியால் பஞ்சாபிற்கு வெளியே 230 ரேக்குகள் மாட்டிக்கொண்டன. இதில் 78 ரேக்குகளில் நிலக்கரி, 34 ரேக் எரு, எட்டு ரேக் சிமென்ட், எட்டு ரேக் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் 102 ரேக் கொள்கலன், எஃகு மற்றும் பிற பொருட்கள் இருந்துள்ளன. இவை பஞ்சாப்புக்குள் வராமல் வெளியிலேயே மாட்டிக்கொண்டுள்ளன.

மேலும் பயணிகள் ரயில்களுக்கும் இதே நிலைமைதான். விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக, 2,352 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டும் உள்ளன, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலும் இந்திய ரயில்வே துறைக்கு பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் ரயில்களை மறித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு வந்து செல்லும் ரயில்களை செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால், அவர்களை ரயில் தண்டவாளங்களில் இருந்து அப்புறப்படுத்துவதே பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இந்நிலையில் தான் இந்த வருவாய் இழப்பு தகவல்கள் வேறு வெளியாகியுள்ளன.