காங்கிரஸ் – திமுக கூட்டணியினர் ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள், ஊழலுக்கு எதிராக பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது, 2 ஜி மட்டுமல்ல பல ஊழல்களுக்கு சொந்தமானவர்கள் இவர்கள் என அமித் ஷா பேசினார்.
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக திருவள்ளூர் நீர்த்தேக்க திறந்து வைத்தும், மெட்ரோ ரயில் 2 வது திட்டம் உள்ளிட்ட சுமார் 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கlல்லும் நாட்டினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: உலகத்திலேயே மிக தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன். எனக்கு தமிழ் தெரியாது. தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் அனைத்துமே தொன்மையானவை. உலக கலாச்சாரம், உலக தொன்மியங்களுக்கு, உலக கலாச்சாரங்களுக்கு தமிழகத்தின் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது அதற்கு நான் தலை வணங்குகிறேன்.
முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி இந்த ஆட்சி தொடரும், சிறப்பாக இருக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அடிக்கல் நாட்டுவிழா அல்லது திட்டங்கள் தொடக்கவிழா இன்று நடந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று நோய் எனும் பெரும்போர் நடந்து வருகிறது. இன்று இந்தியாவில் மோடி தலைமையின் கீழ் வெற்றிகரமாக உலக வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக நம் இந்திய நாடு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகம் மட்டுமல்ல 130 கோடி மக்களும் போராடிக்கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடியின் அற்புதமான தலைமையின் கீழ். தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் கோவிட்டுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாடுமுழுதும் உள்ள கொரோனா மீட்சி விகிதத்தைவிட தமிழகத்தின் மீட்சி விகிதம் சிறப்பாக உள்ளது, பாராட்டத்தக்கது. என்னுடைய துறையானது கோவிட் தொற்றை ஒருங்கிணைக்கும் வேலையை செய்கிறது. பல மாநில முதல்வர்கள், அதிகாரிகளுடன் பேசும்போது கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் நாட்டின் அதிகாரிகள் அறிவியல் பூர்வமாக தகவல்களை அளிப்பதோடு, சிறப்பாக செயல்பட்டும் வருகிறார்கள்.
நாடு முழுவதிலும் இந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், சிசு பராமரிப்பில் தமிழ்நாட்டைப்போல் எந்த மாநிலத்திலும் சிறப்பாக செயல்பட்டதில்லை. இது கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் மட்டுமல்ல. இந்த நிலை அனைத்து நேரங்களிலும் ஆக்கப்பூர்வமான நிலையாக உள்ளது. மேலும் நீர் பாதுகாப்பு, நீர் விநியோகம் இரண்டுத் துறைகளிலும் தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. எப்படி உடல் நலக்குறியீடுகளிலும், மாநிலங்களுக்கிடையேயான போட்டியிலும் வெல்கிறார்களோ, அதேப்போல் மாவட்டங்களுக்கிடையேயான போட்டியிலும் இரண்டு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள்தான் அவை.
நாடுமுழுவதும் இருக்கும் விவசாயிகள் பல தடைகளில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடிய முறையில் மூன்று முக்கிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதை தமிழக அரசும் ஆதரிக்கிறது. இது தமிழக விவசாயிகளை அந்தத் தடையிலிருந்து காக்கும். ஏழைகளுக்கான பல நல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஜன்தன் திட்டப்படி ஏழைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு இலவச எரிவாயு திட்டம் சுமார் 13 கோடி இல்லங்களுக்கு எரிவாயு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இதேப்போன்று கழிவறை திட்டத்திலும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதேப்போன்று அனைவருக்கும் வீடு திட்டம் 2022-க்குள் முடிவடையும் என நம்புகிறேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுபோன்ற திட்டங்களில் ஒரு அளவீட்டை வைத்து பார்த்தால், போட்டி என்று வைத்தால் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் இடைத்தரகர் இன்றி ரூ.6000 கொண்டுச் சென்று சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை நேரடி பரிவர்த்தனையாக 95000 கோடி ரூபாய் நேரடியாக கொண்டுச் சென்று சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்தது கிடையாது.
தமிழ்நாட்டில் 45 லட்சம் விவசாயிகளுக்கு 4400 கோடி ரூபாய் நேரடியாக கொண்டுச் சென்று சேர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நபார்டு, ஊரக வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ளது. நீலப்புரட்சி என்று சொல்லக்கூடிய திட்டத்தில் தமிழ்நாட்டில் பெரும் சாத்திய கூறுகள் நிலவுகின்றன. தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 82000 டன் அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கூடியவிரைவில் தமிழகம் முதலிடத்துக்கு வரும். ஏழைமக்களுக்கு சுத்தமான குடிநீர் கொண்டுச் சேர்க்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் சுமார் 15 சதமான ஏழை மக்கள் வீட்டில் சுத்தமான குடிநீர் இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி அரசின் நோக்கம் 2022-க்குள் அனைத்து ஏழை மக்கள் வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் சென்று சேரவேண்டும் என்பதுதான்.
தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் இங்கு சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு பாறையைப்போல உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் 2 இடங்களில் பாதுகாப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று உ.பி.யில் இன்னொன்று தமிழகத்தில். அதை அமைத்ததும் பிரதமர் மோடி அரசுதான். சாகர்மாலா திட்டத்தின்படி தமிழகத்துக்கு 2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறைமுக கட்டமைப்புக்காக 1 கோடியே 36 லட்சம் கோடி ரூபாயும், சாலை திட்டத்துக்கு 57000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் 12,460 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி வைத்தார். 7700 கோடி செலவில் கிழக்கு கடற்கரை சாலையில் பணிகள் தொடங்கிவிட்டது.
இந்தியாவின் குடியரசு தலைவர் கலாம் நினைவிடமும் பிரதமர் மோடி அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் சில வழித்தடங்களில் ஓடுகிறது. அதில் ஒன்று சென்னை மதுரை இடையே ஓடுகிறது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. திமுக தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது என்று கூறுகிறார்கள். நான் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் 10 ஆண்டுகள் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள் நீங்கள் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் சொல்ல தயாரா? நான் பணிவாக இந்த இடத்திலிருந்து நாங்கள் என்ன செய்தோம் என்று சொல்கிறேன்.
காங்கிரஸின் மன்மோகன் அரசு 2013, 2014-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு 16,155 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கடந்த நிதியாண்டில் இந்த அரசு 32,750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டங்களுக்கு தனியாக ஒதுக்கீடு நடக்கிறது. கோவிட்-19 பெரும் தொற்றை ஒட்டி நேரடி பணப்பரிமாற்றம் வாயிலாக 4500 கோடி ரூபாய் பொதுமக்களுக்கு கொண்டுச் சேர்க்கப்பட்டுள்ளது.
108 கோடி கிலோ அளவிலான உணவு தானியங்கள் கடந்த 4 மாத காலத்தில் மத்திய அரசால் கொண்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. 3.36 கோடி அளவிலான பருப்பு வகைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது ஏழைகளுக்கு. 1.83 கோடி பெண் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சுமார் 1000 கோடி வரையிலான நேரடி பணபரிவர்த்தனை நடந்துள்ளது. உஜ்வலா திட்டத்தின்படி 52.76 லட்சம் ஏழை தாய்மார்கள் வீடுகளுக்கு இலவச எரிவாயு திட்டம் கொண்டுச் சென்று சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறை, உள்கட்டமைப்பு, ஏழைகள் நலன் ஆகட்டும் என்.டி.ஏ, மோடி மற்றும் பழனிசாமி அரசு மக்களுடன் தோளோடு தோளாக நின்று உழைப்போம் என உறுதி கூறுகிறேன். மிக நீண்ட காலத்துக்குப்பின் நான் சென்னை வந்ததுள்ளதால் நான் அரசியல் பற்றியும் பேச விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் வேளையில் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். மோடி, ஊழல், குடும்ப அரசியல், சாதிய அரசியலுக்கு எதிராக பிரச்சினைகளை கையிலெடுத்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். குடும்ப அரசியலுக்கு எதிராக ஒன்றை சொல்கிறேன். நண்பர்களே எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறது. காங்கிரஸ் – திமுக கூட்டணியினர் ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. 2ஜி மட்டுமல்ல பல ஊழல்களுக்கு சொந்தமானவர்கள் இவர்கள். ஊழலைப் பற்றி பேசும் முன் திரும்பி உங்கள் குடும்பத்தை பாருங்கள். ஏழைகள் நலனில் பிரதமர் மோடி அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. தமிழக மீனவர்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் பார்வையையே மோடி மாற்றியுள்ளார்.
யாழ்ப்பாணம் சென்ற மோடி அங்கு வீடுகள் இழந்த 50 லட்சம் தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். உலக நாடுகளிடையே மதிப்பும், மரியாதையும் இந்தியாவிற்கு கூடியுள்ளது. நமக்கு பாதுகாப்பும் கிடைத்துள்ளது. நம்முடைய பாதுகாப்புப் படையினர் 2 நாட்களுக்கு முன் 4 தீவிரவாதிகளை பெரும் ஆயுதக்குவியலுடன் பிடித்து அந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். நமது தீரமிக்க ராணுவ வீரர்களை வாழ்த்துகிறேன். இந்தியா இனி வரும் காலங்களில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும். தமிழக முதல்வருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்”. என்று அமித்ஷா தான் உரையை முடித்தார்.