தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி (Online Rummy) போன்ற இணைய வழி சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் விளையாடினால் ஆறு மாதம் சிறை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர கால சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இணயவழி சூதாட்ட விளையாட்டுகளால்பலர் தங்களது பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு செல்லும் முடிவுக்கு வருகின்றனர். இந்த இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு நாடு முழுவதும் பல எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் இணையவழி ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் அத்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர கால சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. “ஆன்லைன் ரம்மி” போன்ற இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழந்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக தமிழக அரசு இந்த அவசர கால சட்டத்தை இயற்ற உள்ளது. இந்த அவசர கால சட்டம், 1930-ம் ஆண்டு தமிழ் நாடு சூதாட்டச் சட்டம், சென்னை நகர காவல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் இயற்றப்பட உள்ளது.
இந்த சட்டத்தை இயற்றுவதன் மூலம், இந்த விளையாட்டில் பணம் வைத்து விளையாடுவோரையும் அதில் ஈடு படுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களையும் தடை செய்ய முடியும். தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத கால சிறை தண்டனை வழங்கவும் வழி வகை செய்யும்.
மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத் திருப்போருக்கு ரூபாய்10,000 ஆயிரம் அபராதமும் இரு ஆண்டுகள்சிறை தண்டனையும் வழங்கவும் அது வழி செய்யும். இந்த விளையாட்டில் பணப்பரிமாற் றங்களை இணையவழி மூலம் மேற் கொள்வதை தடுக்கவும் இந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் அவசர சட்டம் வழிவகுக்கும். எனவே, “ஆன்லைன் ரம்மி” போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர கால சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்” என அதில் குறிப்பிட்டுள்ளது.
0 comment
Visitor Rating: 5 Stars