லண்டன் “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள, கொரோனா தடுப்பு மருந்து, ரூபாய் 1,000 – க்கு வினியோகிக்கப்படும்,” எனறு, “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், “ஆஸ்ட்ரா ஜெனகா” என்ற நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில். இதுவரை நடந்துள்ள பரிசோதனைகளின்படி, இந்த மருந்து, வயதானோருக்கு நல்ல பலன் தருவதாக தெரியவந்துள்ளது.
நமது இந்திய நாட்டில், இந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தடுப்பு மருந்து குறித்து, சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறும்போது
“தடுப்பூசி மருந்தின், இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. பரிசோதனை முடிவுகள், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படை யில், மக்களுக்கு இரண்டு “டோஸ்” தடுப்பு மருந்தானது, விலை 1,000 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், சுகாதார ஊழியர்களுக்கும், வயதானோருக்கும் இந்த தடுப்பு மருந்து கிடைத்துவிடும்.
வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், பொது மக்கள் அனைவருக்கும் கிடைத்துவிடும். ஒட்டுமொத்தமாக அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க, மூன்று ஆண்டுகள் வரை ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால், 2024க்குள், அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும். மேலும் இந்த தடுப்பூசி மருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக, எந்த புகார்களும் இதுவரை வரவில்லை. இந்தியாவில் செய்யப் பட்ட பரிசோதனை களின் முடிவுகள், ஒன்றரை மாதங்களில் கிடைத்துவிடும். அதை வைத்து, தடுப்பூசி மருந்தின் செயல்திறனை, நாம் அறிந்துகொள்ளலாம்”. இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளார்.