தன் வீட்டில் வந்து விழுந்த அந்த விண்கல்லை தன் கையால் எடுக்க முற்பட்ட போது, அது மிகச் சூடாக இருந்ததாகவும், ஓரளவு உடைந்திருந்ததாகவும் ஜோசுவா என்ற அந்த வீட்டின் உரிமையாளர் கூறினார்.
இந்தோனேஷியாவை சேர்ந்த 33 வயதான ஒருவர் ஒரே இரவில் பில்லினராகியுள்ளார். அவருக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் வானிலிருந்து கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டியுள்ளது. சுமார் ரூபாய் .10 கோடி மதிப்புள்ள விண்கல் ஒன்று அவரது வீட்டின் மேற்புரம் தகரத்தால் ஆன கூரையை பொத்துக்கொண்டு அவர் வீட்டிற்குள் விழுந்தது.
ஜோசுவா ஹுடகலுங் என்ற அந்த நபர் மனிதர்களுக்கான சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வருகிறார். அவர் தன் வீட்டில் ஒரு சவப்பெட்டி செய்து கொண்டிருந்தபோது, அந்த விண்கல் வீட்டில் வந்து விழுந்தது. வடக்கு சுமத்ராவின் கோலாங்கில் உள்ள அவரது வீட்டில் அந்த விண்கல்லானது கூரையை பொத்துக்கொண்டு விழுந்துள்ளது.
கிலோ 2.1 எடையாளவு கொண்ட அந்த விண்கல்லானது அவ்ரது மேற்பரப்பு கூரை வழியாக விழுந்த வேகத்தில் அவரது வீட்டின் உள்ளே உள்ள தரையை உடைத்துக்கொண்டு 15 செ.மீ ஆழத்தில் புதைந்துள்ளது. விண்கற்களின் விலை அவற்றின் எடையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மையான விண்கல்லின் வகைகள் ஒரு கிராமுக்கு டாலர் 0.50 முதல் 5.00 டாலர் வரை இருக்கும். பூமியில் காணப்படாத உலோகங்களைக் கொண்ட அரிய வகை விண்கற்கள் கிராமுக்கு குறைந்தது டாலர் 1,000 வரை கூட விற்பனை செய்யப்படுவதுண்டு.
தனது வீட்டில் வந்து விழுந்த அந்த விண்கல்லை எடுக்க ஜோசுவா முற்பட்ட போது, அது மிக சூடாக இருந்ததாகவும், ஓரளவு உடைந்திருந்ததாகவும் அவர் கூறியுளர். இந்த விண்கல்லானது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்படுகிறது. இது மிகவும் அரிதான வகையாகும். இந்த வகையான விண்வெளி கற்களின் விலை சுமார் 1.85 மில்லியன் டாலர், அதாவது ஒரு கிராமுக்கு டாலர் 857 ஆகும்.
அவர் அந்த கல்லை பற்றி கூறும்போது “நான் அதைத் தூக்கியபோது, அந்த கல் மிக சூடாகத்தான் இருந்தது, அதை வீட்டிற்குள் கொண்டு வந்தேன். அது விழுந்த சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. என் வீட்டின் சில பகுதிகளும் ஆடிக்கொண்டிருந்தன. பின்னர்தான் என் வீட்டின் தகர கூரை உடைந்திருப்பதைக் கண்டேன். இந்த விண்கல் பாறை கண்டிப்பாக வானத்திலிருந்து தான் விழுந்துள்ளது. பலர் மெடரோய்ட் என அழைக்கும் ஒரு விண்கல்தான் இது. யாரோ ஒருவர் வேண்டுமென்றே அதை மேலே இருந்து எறிவதோ இறக்கிவிடுவதோ சாத்தியமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
விண்வெளி பாறைக்கு பதிலாக ஜோசுவாவின் 30 ஆண்டுகால ஊதியத்துக்கு நிகரான தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக விண்கல்லை வாங்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சிறு தொகையை ஒரு தேவாலயத்தை கட்ட பயன்படுத்துவேன் என்று ஜோசுவா கூறியுள்ளார். மேலும் அவர் “எனக்கு எப்போதுமே ஒரு மகள் பிறக்கவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. மகள் பிறப்பதற்கான ஒரு அதிர்ஷ்டமான அறிகுறியாகதான் நான் இதை கருதுகிறேன்” என்று அவர் அங்குள்ள ஒரு மிக பெரிய செய்தி நிறுவனமான தி சன்-யிடம் தெரிவித்துள்ளார்.