“லவ் ஜிகாத்” சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவித்துள்ளார். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் அம்மாநில சட்டசபையில் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் சட்டப்பிரிவு எண் 21 – ன் படி, ஒருவர் தான் விரும்பும் பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு. இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம் “லவ் ஜிகாத்” என்ற சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது வரை “லவ் ஜிகாத்” என்ற உறையாடல் இந்திய சட்ட அமைப்பில் இல்லை. இந்து பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் திட்டமிட்டு மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறி “சங் பரிவார்” அமைப்பு கொண்டு வந்த சொல்லே “லவ் ஜிகாத்”. இதே சட்டத்தை பாஜக ஆளும் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜாமினில் வெளிவர முடியாத சட்டமாக இது அமையும் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மிஸ்ரா தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் மதம் மாற்றி நடைபெறும் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே, மாவட்ட ஆட்சியருக்கு அதனை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியும் இதில் கொண்டு வரப்படுகிறது. கட்டாயப்படுத்தி, ஏமாற்றி, அல்லது ஆசை வார்த்தைகள் கூறி நடைபெறும் மதம் மாற்று திருமணங்களை செல்லாது என்ற சட்ட விதி இருக்கும். இந்த குற்றத்திற்கு உதவி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க்ப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த் மாநிலத்தில் காதல் என்ற பெயரில் லவ் ஜிகாதுக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு எதிராக சட்ட விதிகள் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கர்நாடக முதல்வர் பி.எஸ் எடியூரப்பாவும், லவ் ஜிகாதுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர பெரும் முனைப்பு காட்டினார். காதல் மற்றும் பணம் என்ற பெயரில் பெண்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். சரியான ஆய்வுக்குபின், இது தொடர்பான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளார்.
மேலும் இந்திய சட்ட அமைப்பில் “லவ் ஜிகாத்” என்ற ஒன்று கிடையாது. அதே போன்று இந்த மாதிரியான எந்த வழக்குகளும் மத்திய புலனாய்வு துறையில் பதிவு செய்யப்படவில்லை. மேலும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எண் 25 – ன்படி, ஒருவர் எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதனை பின்பற்ற உரிமை உள்ளது என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த ஆண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். எனினும், அவர் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்த இது தொடர்பான இரு வழக்குகளை குறிப்பிட்டார். இதில் ஒன்று கேரள மாநிலத்தை சேர்ந்த ஹதியா வழக்கு. மதம் மாற்றி திருமணம் செய்து கொண்ட ஹதியா, தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே செய்ததாக தெரிவித்தும் கேரள உயர்நீதிமன்றம் அவர்கள் திருமணத்தை ரத்து செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம், அவர்களது திருமணம் செல்லும் என்று வரலாற்று தீர்ப்பளித்தது.
அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைப்படி இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவர முடியாது என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஆல் வழிநடத்தப்படும் பாஜக, அரசியல் சாசனத்தை மதிப்பதில்லை. அதில் இருக்கக்கூடிய வதிகள், நிபந்தனைகள், வழிமுறைகளை மீறுவதே இவர்களின் நடைமுறையாக இருந்து வருகிறது என்று அவர் கூறுகிறார். ஆண்டின் நிதி அறிக்கையில் தொடங்கி, பொது வளங்களை விற்பது வரை, விவாதங்களே இல்லாமல் ஆளும் பாஜக அரசு சட்டங்களை நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட, அருள்மொழி, “லவ் ஜிகாத்” சட்டத்தை சில மாநிலங்கள் கொண்டு வரலாம் என்றே தோன்றுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி இந்த சட்டம் கொண்டு வந்தால், இது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.
“ஜிகாத்” என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் வகையில் இருக்கிறது. அப்போது வேறு மதத்தினர் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்த சட்டத்தில் வராதா? வரும் என்றால், இந்தியாவில் யாரும் மதம் மாறித் திருமணம் செய்து கொள்ள தடை விதிக்கப் போகிறார்களா? மனுஸ்மிரிதியை சட்டமாக்கப் போகிறார்களா?” என்று வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி? எழுப்பியுள்ளார்.