
நாம் வாழும் இந்த பூமியானது ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1670 கி.மீ வேகத்தில் சுழல்கிறது. அதாவது ஒரு நிமிடத்துகுக் கிட்டத்தட்ட 27.83 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது. பூமி சுற்றுவது என்பது சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானதிலிருந்து நடக்கும் ஒரு செயல்தான். இவ்வாறு பூமி சுற்றுவதால் என்ன பயன்? நிற்காமல் சுற்றும் இந்த பூமி, ஒருவேளை தான் சுற்றுவதை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?

இதை அறிவதற்கு முன்பு நாம் பூமி சுற்றுவதால் என்ன செயல்கள் நடக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நாம் வாழும் இந்த பூமி சுற்றுவதால் என்ன நடக்கிறது?

பூமி தன்னை தானே சுற்றுவதால்தான் இரவு பகல் வருகின்றது. இதனால் தான் இயற்பியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் இந்த பூமியில் நிகழ்கின்றன. ஏனெனில் உலகின் அனைத்து உயிரியல் நிகழ்வுகளுக்கும் சூரிய ஒளி தான் முதல் ஆதாரம். வளிமண்டல சுழற்சியும் மற்றும் பூமியில் காணப்படுகின்ற நிர்பரப்பின் சுழற்சியும் கூட பகல் இரவுகளால் மாற்றங்களை காண்கின்றன. பூமி சுழல்வதால் வளிமண்டலத்தில் வீசும் காற்று மற்றும் பூமியின் உள்ள நீரோட்டங்களின் பாதைகளில் விலகல்கள் ஏற்படுகின்றன. பூமியின் சுழற்சி மற்றும் பூமியின் துணை கோளான நிலவின் ஈர்ப்பு விசையால் கடல்நீர் மட்டத்தில் பெரும் அலைகள் உருவாகின்றன. இது கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு உயிர் ஆதாரமாக அமைகிறது.

பூமி சூரியனை அதன் மைய அச்சில் ஒருபக்கமகா சாய்ந்து சுற்றுவதன் காரணமாகப் பகல் இரவு நேரங்கள் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொள்வது மட்டுமின்றி, சூரியனையும் ஒரு வினாடிக்கு 18.5 மைல் அல்லது மணிக்கு 66,600 மைல் வேகத்தில் நீள்வட்ட பாதையில் அதன் மைய தளத்திலிருந்து 66.5 டிகிரி கோணத்தில் சாய்வாகத் தனது அச்சில் சுற்றி வருகிறது. அதாவது பூமியானது 23.5 டிகிரி ஒருபுறமாக சாய்ந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது.

இவ்வாறு சூரியனை பூமியானது ஒருமுறை சுற்றிவர 365.25 நாள் அதாவது 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 45 நொடிகள் ஆகிறது. இதனையே ஒரு ஆண்டு என்கிறோம். நாள் காட்டியில் 0.25 நாளை காட்ட இயலாது என்பதனால் சாதாரண ஒரு ஆண்டானது 365 நாட்களை மட்டுமே கொண்டிருக்கும். கணக்கில் வராத மீதமுள்ள 0.25 நளை நான்கு வருடங்கள் முடிவில் ஒரு நாளாக கணக்கிடப்படுவதால் 366 நாட்களுடன் இருக்கும், இதையே நாம் லீப் ஆண்டு என்று கூறுகிரோம். இது ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதத்துடன் சேர்த்து 29 நாளாகக் கணக்கிடப்பட்டு வருகிறது.

பூமி சூரியனை அதன் அச்சில் சாய்ந்து சுற்றுவதன் காரணமாகப் பகல் இரவு நேரங்கள் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் பூமியில் பல்வேறு பருவ காலங்களும் தோன்றுகின்றன. ஒரு வேளை பூமியானது தனது அச்சில் சாயாமல் சூரியனைச் சுற்றும் நீள் வட்டப் பாதைக்கு நேர் செங்குத்தாகச் சுற்றினால், ஆண்டுதோறும் புவியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே அளவு பகல் இரவு நேரங்கள் இருக்கும். பருவகாலங்கள் எதுவும் அதனால் ஏற்படாது.

ஒருவேளை பூமியானது தன்னைதானே சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் நிலமை? பூமி சுற்றுவது எல்லாவகையிலும் நல்லது மட்டும்தான் என்றாலும். இவ்வாறு சுற்றிக்கொண்டே இருக்கும் பூமி திடீரென்று சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுமார் 1670 கிமீ வேகத்தில் சுற்றும் பூமி தன் சுழற்சியை நிறுத்தும் போது என்ன ஆகும்? எல்லாமே கேள்விக்குறிதான்?

பூமியில் உள்ள அனைத்தும், கிழக்கு திசை நோக்கி வேகமாக வீசி எறியப்படும். கூடவே அதிக அளவிலான கடல்நீர் சீற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. மொத்தத்தில் யாரும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாது. ஆனால் அதே சமயம் பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தினாலும் சூரியனைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கும். எனவே பூமியின் ஒருபுற பகுதி வருடத்தில் ஆறு மாதங்கள் இருளாகவும் அதேவேளை அதன் எதிர்பகுதி அந்த ஆறு மாதங்கள் முழுவதும் வெளிச்சமாகவும் காணப்படும். அவ்வாறு இருளில் உள்ள பகுதிகள் பனிப் படர்ந்த பிரதேசமாகவும் சூரிய ஒளியால் வெளிச்சம்படும் பகுதிகள் தொடர் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பாலைவனமாகவும் உருமாறிவிடும்.

மேலும் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்குப் பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். இது தினந்தோறும் நடைபெறுவது அல்ல. ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே நடக்கும், ஏனெனில் இப்போதைய 365.25 நாட்களும் சேர்ந்து அப்போது ஒரு நாளாக காணப்படும். இந்த நீண்ட கால வெப்பநிலை மற்றும் வளிமண்டல காற்று பூமியின் சுழற்சி முறையை மாற்றிவிடும். இதனால் காற்று நிலநடுக்கோட்டுக்கு (பூமத்திய ரேகை) இணையாக பூமியின் துருவங்களுக்கு நகரும். வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் காற்றின் வேகம் அணுகுண்டு வெடிப்பினை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

அடுத்து, பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தியதும் பூமியில் காணப்படும் காந்தப்புலம் இல்லாமல் போய்விடும். காந்தப்புலம் இல்லாவிட்டால், சூரிய எரிப்புகள், தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுக்கள் என்று பல ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம். சுழற்சி இல்லை என்றால் பூமியின் மைய விலக்கு விசையும் இல்லை. இதனால் கடல்கள் துருவங்களை நோக்கி நகரத் தொடங்கித் துருவப் பகுதிகளை முழுவதுமாக மூழ்கடித்துவிடும். இதற்கு நேர்மாறாக, பூமத்திய ரேகையில் ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு வெளிப்படும், பின்னர் அவை இருபுறமும் இரண்டு பரந்த நீர்நிலைகளால் சூழப்பட்டுக் காட்சியளிக்கும்.

பூமி உடனடியாக நிற்பது நடக்க இப்போதைக்கு வாய்ப்பே இல்லை, இது ஏற்பட கண்டிப்பாக சில பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் சுழற்சியின் வேகம் கண்டிப்பாக படிப்படியாகக் குறையும் என்பது மட்டும் அறிவியல் உண்மை. பல அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி பூமி உருவான காலகட்டத்தில் இப்போது இருப்பதை விடவும், பூமி மிக வேகமாகச் சுழன்று இருக்க வேண்டும். அப்போது ஒருநாள் என்பது வெறும் ஆறு மணி நேரமாகக் கூட இருந்திருக்கலாம். நம் பூமியின் துணைக்கோளான நிலவானது பூமிக்கு மிக அருகில் உருவானதால் பூமி சுற்றும் போது பூமி மற்றும் நிலவுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழலும் வேகம் குறைந்திருக்கலாம் என்றும் அறிவியலார்கள் கருதுகின்றனர்.

ஆனால் இனி வரப்போகும் காலங்களில் இந்த வித்தியாசம் பெரிதாக எல்லாம் மாற்றம் ஏற்படாது. ஏனெனில் அடுத்த சில நூறாண்டுகளுக்குப் பிறகு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால நேரம் 2 மில்லி நொடிகள் மட்டுமே கூடுதலாக இருக்கும் என்பது அறிவியலாளர்களின் ஆராய்ச்சி கருத்து. இதனால் இப்போது வாழும் நமக்கு மட்டும் இல்லை பூமில் வரப்போகும் எதிர்கால சந்ததியினருக்கும் எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை. அதுவரைக்கும் நாம் நிம்மதியாக வாழலாம் இந்த பூமி பந்தில்.
உங்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் தளங்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகிரலாம், நீங்கள் பகிரும் போது இந்த இணையதளத்தின் இணைப்பை கண்டிப்பாக அந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டும், இந்த கட்டுரையை புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பகிரும் முன் அறிவியல்புறத்திலிருந்து முன் அனுமதி பெறவேண்டும், எங்களை தொடர்புகொள்ள: [email protected]
காப்புரிமை © www.ariviyalpuram.com