பீகாரின் மிகவும் பின்தங்கிய சமூகத்தின் பெண் தலைவரான ரேணு தேவி துணை முதல்வராக பதவியேற்று பீகாரில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பீகார் முதல்வராக தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ்குமார் அவர்கள் பதவி ஏற்றுள்ளார். அவருடன் இந்த முறை பாஜக-வின் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்நிலையில், அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, சுஷில் மோடிக்கு பதிலாக நிதிஷ் அமைச்சரவையில் பாஜக – வில் இருந்து ரேணு தேவி என்ற பெண் மற்றும் தர்கிஷோர் பிரசாத் என்ற இரண்டு பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றுள்ளனர். அதில், ரேணு தேவிக்கு வயது 62 . பீகார் வரலாற்றில் ஒரு பெண், துணை முதல்வராக பதவியேற்றுள்ளது அங்கு ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 1959 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 – ஆம் தேதி பிறந்த ரேணு தேவி, பீகாரில் மிகவும் பின்தங்கிய ஈபிசி பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்ட நோனியா என்ற பிரிவைச் சேர்ந்தவர்.
1981 – ஆம் ஆண்டில் இருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர் இந்த ரேணு தேவி. முதலில் தன்னார்வ தொண்டில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்த ரேணு தேவி, பின்னர் 1988-ல் பிஜேபியில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக்கொண்டார். 1989-ஆம் ஆண்டில், சம்பரன் பிராந்தியத்திற்கான பெண்கள் பிரிவின் பாஜக-வின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் சிறப்பாக செயல்பட, பாஜக-வின் பெண்கள் பிரிவான “மகிளா மோர்ச்சா”-வின் மாநில தலைவர் பதவி 1993-ல் ரேணு தேவிக்கு கிடைத்தது. இதே பதவி 1996-லும் அவருக்கு கிடைத்தது. அதன்பின் 2014-ல் பாஜக கட்சியின் துணைத் தலைவராக பதவியுர்வு அடைந்தார் இந்த ரேணு தேவி.
கட்சிப் பதவிகளில் வலுவாக முன்னேறிவந்த அதே காலகட்டத்தில் இவர் மக்கள் பிரதிநிதி பதவிக்காகவும் போட்டியிட்டார். 1995-ல் பாஜக-வுக்கான தனது முதல் தேர்தலில் நவுடான் தொகுதியில் போட்டியிட்டு அதில் தோல்வி கண்டார்.ஆனால் மனம் தளராத அந்த பெண் 2000, 2005 மற்றும் 2010 தேர்தல்களில் மூன்று முறை பீகாரின் பெட்டியா தொகுதியில் இருந்து வெற்றிபெற்று தேர்வாகி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இதில் 2005 மற்றும் 2009-ல் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. விளையாட்டு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக ரேணு தேவி பொறுப்பில் இருந்தார்.
பீகாரின் மிகவும் பின்தங்கிய பிரிவின் ஒரு பெண் தலைவர் அவர்தான்.
தேசிய அளவில் பனியா சமூகம், பொருளாதாரம், மற்றும் சமூக ரீதியில் உயர் பிரிவினராக கருதப்பட்டாலும், அதன் உள்பிரிவான நோனியா பிரிவு, பீகாரில் மிகவும் பின்தங்கிய வர்க்க (ஈபிசி) பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையான செயல்பாடுகளால் சென்ற 15 ஆண்டுகளில் ஈபிசி பிரிவை தனது விசுவாசமான வாக்கு வங்கியாக உருவாக்கியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இந்தச் சமூகத்தின் மிக முக்கிய தலைவராக தனது அமைச்சரவையில் கோலோச்சிய ரேணுவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும்பட்சத்தில், அவர் சார்ந்த சமூகத்துக்கு முக்கியவத்துவம் கொடுக்கும் வகையில் அமையும் என்று நிதிஷ் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் ரேணு தேவி, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் மிகுந்த நெருக்கம் கொண்டவர். மேலும் தன்னை தீவிர, அமித்ஷா ஆதரவாளராக காட்டிக்கொண்டவர் என்பதால் எளிதில் அவருக்கு துணைமுதல்வர் பதவி கிடைத்துள்ளது எனக் கூறி வருகிறார்கள் பீகார் அரசியல் பார்வையுள்ளவர்கள்.