
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்த ஆண்டு சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக 2,300 கோடி ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றில் 90 சதமான பட்டாசுகள் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு அனுப்பப்பட்ட பட்டாசுகளில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பு மிக்க பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதால் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.