ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிதாக இணையவுள்ள 9-வது அணியைப் பிரபல மலையாள நடிகர் திரு மோகன் லால் வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2021 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒரு அணி இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐபிஎல் அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி 2021 ஐபிஎல் போட்டியில் குஜராத் சார்பாக ஓர் அணி புதிதாக உருவாக்கப்படவுள்ளது.
இதனால் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஐபிஎல் ஏலத்தை நடத்தவுள்ளது பிசிசிஐ. இதனால் தற்போதுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் அறியப்படுகிறது. இந்த நிலையில் இறுதி ஆட்டத்தின்போது விளையாட்டு மைதானத்துக்கு கேரளா மாநிலத்தை சேர்ந்த மலையாள நடிகர் திரு மோகன் லால் வருகை தந்தார்.
சமீபத்தில் 46 நாட்களில் த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன் லால், உடனடியாக துபைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் ஓய்வு எடுக்க துபாயீக்குச் செல்வதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், ஐபிஎல் போட்டியில் உருவாகவுள்ள புதிய அணியை வாங்குவது தொடர்பாகப் பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் பேச்சுவார்த்தை நடத்தவே மோகன் லால் துபைக்குச் சென்றுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 9-வது ஐபிஎல் அணியை வாங்க திரு மோகன் லாலும் மற்றும் பைஜூ நிறுவனமும் போட்டியிடுவதாகவும் அறியப்படுகிறது. எனினும் 9-வது அணி குறித்து பிசிசிஐ அமைப்போ அதனை வாங்குவது குறித்து திரு மோகன் லாலோ இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் எங்கும் தெரிவிக்கவில்லை.