
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் டில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் 2021 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒரு அணி இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் கிரிக்கெட் விளையாட்டு மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐபிஎல் அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி 2021 ஐபிஎல் போட்டியில் குஜராத் சார்பாக ஓர் அணி புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

இதனால் ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஐபிஎல் ஏலத்தை நடத்தவுள்ளது பிசிசிஐ. இதனால் தற்போதுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் அறியப்படுகிறது. 2021 ஐபிஎல் போட்டி பற்றிய அதிகாரபூர்வ விவரங்களை பிசிசிஐ விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.