ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாகவும் அதனால் அவரது காதலி அவரை பதவியிலிருந்து விலக நிர்பந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அரசியலில் ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பை கூட்டியுள்ள இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து வெளியாகியிருக்கும் செய்தி, அந்நாட்டின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு மாஸ்கோவின் அரசியல் ஆய்வாளர் வலேரி சோலோவி பேட்டியளித்துள்ளார். அதில், அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.
சமீபத்திய காணொளி ஒன்றில் நாற்காலியை பிடித்திருக்கும் போது அவரது கால்கள் நடுங்குவது தெரிந்தது. இதனால் அவருக்கு பார்கின்சன் நோய் உள்ளது என பரவலாக பேசப்படுகிறது. அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது முதல் முறை அல்ல இது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தகவல் பரவி அடங்கியது.
ஆனால் இம்முறை அவரது 37 வயது காதலி அலினா கபீவாவும், அவரது இரண்டு மகள்களும் அவரை பதவியை விட்டு விடுமாறு நிர்பந்திக்கின்றனர். உடல்நிலையை கவனிக்க வலியுறுத்துகின்றனர் என அரசியல் ஆய்வாளர் சோலோவி கூறியுள்ளார். ரஷ்யாவில் இருமுறைக்கு மேல் தொடர்ந்து அதிபராக நீடிக்க முடியாது என சட்டம் இருந்ததை, வாக்கெடுப்பு மூலம் மாற்றி 2036 வரை அசைக்க முடியாத அதிபராக இருக்க வழிவகை செய்திருந்தார் புடின்.
இந்த நிலையில் தான் அவருக்கு பார்கின்சன் நோய் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பார்கின்சன் நோய் என்பது ஒரு சீரான நரம்பு மண்டல கோளாறு ஆகும். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி உடலின் இயக்கத்தை பாதிக்கும். கை நடுக்கத்துடன் ஆரம்பிக்கும் இது படிப்படியாக வளர்ந்து உடல் விறைப்புத்தன்மையை உண்டாக்கும். சமநிலை தவறி, தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படும். இதனை குணப்படுத்த முடியாது என்றாலும் துணை சிகிச்சைகளான பிசியோதெரபி மற்றும் சில மருந்துகள் மூலம் நோயின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம்.