உண்மை, அறிவியல் மற்றும் ஒற்றுமையை தேர்வு செய்ததால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்து தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று துணை அதிபராக தேர்வாகி உள்ள தமிழர் மற்றும் ஆப்பிரிக்கா வம்சாவழியில் பிறந்த கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பிடனை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து துணை அதிபரான கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது: அமெரிக்காவில் 55 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்களிக்க உரிமை பெற்ற பெண்கள் இன்று 2020-ல் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர். அமெரிக்க மக்களுக்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் எனறு நினைத்திருக்கமாட்டார்கள்.
தனி ஒருவராக என் தாயார் என்னை வளர்த்து உருவாக்கினார். இந்த தருணத்தில் அவரை நினைத்து கொள்கிறேன். இப்படியான ஒரு சூழ்நிலையை சாத்தியப்படுத்திய அமெரிக்க கருப்பர் இன மக்கள், ஆசிய நாட்டவர், வெள்ளை இன மக்கள், லத்தீன் நாட்டவர் அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.
அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம். ஒபாமா வழியில் அமெரிக்கா நலனுக்காக செயல்படுவேன். கருப்பின பெண்கள் உட்பட அனைத்து பெண்கள் நலன்களுக்காகவும் பாடுபடுவோம். அமெரிக்காவின் துணை அதிபராகும் முதல் பெண் நான், ஆனால் நானே கடைசி பெண்ணாவும் இருக்கமாட்டேன். நீங்கள் அறிவியல், ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உண்மையை தேர்வு செய்திருக்கிறீர்கள். ஆகையால் ஜோ பிடனுக்கு வாக்களித்து அவரை அதிபராக தேர்வு செய்திருக்கிறீர்கள். இவ்வாறு கமலா ஹாரிஸ் அந்த உரையை ஆற்றியுள்ளார்.