அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்புள்ள இந்நிலையில் வருங்கால அமெரிக்க அதிபர் பிடன் உடன் நெருக்கமாவதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
குடியரசு கட்சியின் அதிபர் டிரம்ப் ஆட்சியை இழந்து, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பிடன் ஆட்சி ஏற்பதற்கான வாய்ப்புகள் அமெரிக்காவில் உருவாகி உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளார்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்புள்ள இந்த நிலையில் வருங்கால அதிபர் பிடன் உடன் நெருக்கமாவதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. முதல்கட்டமாக இதற்கான கூட்டங்கள் கூட நடந்து வருகிறது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்சித் சிங் சந்து சார்பாக இந்த கூட்டங்கள் நடந்து வருகிறது. வரிசையாக பல்வேறு கூட்டங்களை இந்தியா சார்பாக இவர் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களில் மட்டும் காங்கிரஸ் அவைக்கு தேர்வாக இருக்கும் ஜனநாயக கட்சியின் செனட்டர்கள், பிரதிநிதிகள் உடன் தரன்சித் சிங் சந்து கூட்டங்களை நடத்தி வருகிறார். சில கூட்டங்கள் வெளிப்படையாகவும்., சில கூட்டங்கள் மறைமுகமாகவும் நடந்துள்ளது. இரண்டு நாட்டு உறவு குறித்தும் அதில் ஆலோசனை செய்துள்ளனர்.
ஆனால் இதெல்லாம் இப்போது அவசரமாக நடக்கும் கூட்டங்கள் கிடையாது. கடந்த 6 மாதமாக இந்தியவால் திட்டமிடப்பட்டு, கொஞ்சம், கொஞ்சமாக சில கூட்டங்கள் நடத்தப்பட்டு. தற்போது தொடர்ச்சியாக பேச்சுவார்தை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களாக தரன்சித் சிங் சந்து ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளான எலியாட் ஏஞ்சல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.
இதெல்லாம் போக இன்னும் வரும் காலங்களில் காங்கிரஸ் குழுவில் இருக்கும் ”பிளாக் கேக்கஸ்” என்ற ஆப்ரோ – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை தரன்சித் சிங் சந்து சந்திக்க உள்ளார். இதில் கமலா ஹாரிஸும் இடம்பெற இருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இந்திய உறவு குறித்து பல முக்கிய ஆலோசனைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.
மேலும் அமெரிக்காவில் ஒபாமாவிற்கு கீழ் பணியாற்றிய இரண்டு இந்திய செயலாளர்களான விவேக் எச் மூர்த்தி மற்றும் ராஜ் ஷா இருவரும் மீண்டும் பிடனுக்கு கீழ் பணியாற்றும் வைய்ப்பை பெற்று உள்ளனர். பிடனுக்கு கீழ் இவர்கள் முக்கிய பொறுப்பை வகிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு தற்போது இருக்கும் இந்திய அமைச்சர்கள் சிலர் நெருக்கம் என்பதால் அவர்கள் மூலமும் வெள்ளை மாளிகைக்கு இந்தியா மிக நெருக்கமாகும் வாய்ப்புகள் உள்ளது.
இதெல்லாம் போக அமெரிக்காவில் பிரதிநிதியாக இருக்கும் அமி பேரா மீண்டும் தேர்தலில் வென்றுள்ளார். இவரிடம் இந்திய தரப்பு கடந்த சில நாட்களாக மிக நெருக்கமாக பேசி வருகிறது. இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் என்பதால். இவர் மூலம் பிடனுக்கு நெருக்கமாக இந்தியா முயன்று வருகிறது. ஆனால் இந்தியாவிற்கு சிக்கலாகி இருப்பது பிரமிளா ஜெயபால் போன்ற சில ஜனநாயக கட்சியினர்தான்.
காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக பிரதிநிதி பிரமிளா ஜெயபால்தான் அமெரிக்காவில் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் அப்போதே பிரமிளா ஜெயபாலுக்கு எதிராக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்து இருந்தார். அதேபோல் பிரமிளா ஜெயபாலுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ், பிடன் இருவருமே பேசி இருந்தனர்.
பிரமிளா ஜெயபால் மூலம் கமலா ஹாரிஸ் , பிடன் இருவருமே இந்தியாவை விட்டு கொஞ்சம் விலகி செல்லும் நிலை ஏற்பட்டது . பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாறன் ஆகியோரும் அப்போது பிரமிளா ஜெயபாலுக்கு ஆதரவாக பேசி இருந்தனர். அப்போது ஜனநாயக கட்சியினர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பிரமிளா ஜெயபாலுக்கு ஆதரவு கொடுத்தனர். அப்படி என்றால் இவருக்கு எவ்வளவு வாய்ஸ் இருக்கும் என்று எண்ணிப் பர்க்க வேண்டும்.
பிடன் சொன்ன சில கருத்துக்கள், கமலா ஹாரிசின் இடதுசாரி மனோபாவம், பிரமிளா ஜெயபாலின் கொள்கை ஆகியவை மட்டும்தான் தற்போது புதிய அமெரிக்க அரசுடன் மத்திய இந்திய அரசு உறவு கொள்ள கொஞ்சம் தடையாக இருக்கும் சில விஷயங்கள். ஆனால் அதையும் கூட தொடர் பேச்சுவார்த்தை கூட்ட்டங்கள் மூலமும், மோடியின் அமெரிக்க பயணம் மூலமும் சரி செய்ய முடியும் என்று இந்தியா நினைக்கிறது. இதற்கான வேலைகள் ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டதால், இந்தியா மிக விரைவில் அமெரிக்க உறவை புதுப்பிக்கும் என்கிறார்கள் பல அரசியல் வல்லுனர்கள்.