தமிழக மண்ணின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொண்டு, மக்களின் உரிமைகளுக்காக பாடுபடக் கூடியவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும், வர வேண்டும் என்று, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி.தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூரில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்கும் கிராமசபை கூட்டத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அங்கு உரையாற்றினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது நடிகர்கள் கட்சி ஆரம்பித்து வருவது பற்றியும், ஆரம்பிக்க உள்ளது பற்றியும் மேலும் நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் கேள்வி எழுப்பியபோது, கனிமொழி எம்,பி, ரஜினி எங்க கட்சி ஆரம்பிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து அவர் பேசுகையில் இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் தங்களை எந்த கட்சியிலும் இணைத்துக் கொள்ளலாம், அது நடிகர்களாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த துறையை சார்ந்தவர்களாகவும் இருக்கட்டும். அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம், யாருக்கும் மாற்று கருத்து கிடையாது, அதை தடுக்கும் எண்ணமும் தங்களுக்கு கிடையாது.
ஆனால் இந்த மண்ணின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொண்டு, தமிழக மக்களின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடியவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வரமுடியும், வரவேண்டும். அதை தமிழக மக்கள் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ் மக்களின் சுயமரியாதையை பாதுகாக்க கூடியவர்கள், அடுத்த தலைமுறைக்கான உரிமைக்காக பாடுபடக்கூடியவர்கள் தான் இங்கு ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்று தமிழக மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை இனியும் காலதாமதம் செய்யமால் அவ்ர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று அதில் கூறியுள்ளார்.