
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்ற மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் வழியாக பாடங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்புக்கு சமூகமக்கள் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தசரா உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பின்னர் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் தமிழக பெற்றோர்கள், உலக நாடுகள் சிலவற்றில் கொரோனாவின் இரண்டாவது சுற்று தொடங்கியிருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டாமல், மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். பெற்றோர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பல அரசியல் கட்சி தரப்பிலும் பள்ளிகள் திறப்பிற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போடுங்கள் என்று எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? எனக்கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவர்களின் உயிரே முக்கியம் எனவும் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்து வருவதாகவும், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் தமிழக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.