பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்சா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக இலங்கை கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 20 ஆவது சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்ட இந்த நிலையில் இதுவரையிலும் இருந்து வந்த இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்பதற்கான தடையை தகர்த்தெறிந்தது இலங்கை அரசாங்கம். இந்த நிலையில் பசில் ராஜபக்சா இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில் ஆளும் கட்சி உறுப்பினரான ஜயந்த கொட்டகொட தனது பதவியிலருந்து விலகுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு அவர் பதவியேற்றால் புதன்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப்படலாம் எனவும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவு ஒன்றிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நாளை அல்லது சில நாட்களில் பசில் பதவியேற்பார் என ஹர்ஸா தனது அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.