யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கின்ற குழந்தைகளுக்கான பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது.
பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங் என்கிற கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்தான் பேபி ஷார்க் பாடலைத் தயாரித்துள்ளது. வெறும் இரு நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் பாடல், அனிமேஷனில் குட்டி சுறா மீன்களுடன் குழந்தைகள் பாடி நடனமாடுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது. வண்ணமயமான காட்சிகள், மனதில் எளிதில் பதியும் மெட்டு என இந்தப் பாடல் உலகத்தில் உள்ள குழந்தைகள் பல கோடி பேரைக் கவர்ந்து இளுத்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ பாடல் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் புகழையும் தாண்டி, கடந்த ஜனவரி மாதம் பில்போர்ட் ஹாட் என்கிற 100 பிரபல பாடல்களின் தரவரிசைப் பட்டியலில் 32-வது இடத்தைப் பிடித்துள்ளது. வாஷிங்டன் நேஷனல்ஸ் பேஸ்பால் அணி இந்தப் பாடலை அவர்களது அணியின் கீதமாக மாற்றிக் கொண்டனர். சென்ற 2019 ஆம் ஆண்டு இந்த அணி வேர்ல்ட் சீரிஸ் தொடரை வெற்றிபெற்ற பின் அதற்காக வெள்ளை மாளிகையில் நடந்த கொண்டாட்டத்தில் இந்தப் பாடல் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.