கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோயில், பறக்கை அருகே கோழிப்பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு சுமார் 800 கோழிகளை கடித்து குதறி கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறக்கை அருகே பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஸ்.
இவர் அந்த பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 1500 கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் நேற்றுறு காலை சதீஸ் தன் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு உணவு போட சென்றுள்ளார். அப்போது சுமார் 800 ேகாழிகள் கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார். முந்தைய நாள் நள்ளிரவு பண்ணைக்குள் ஏதோ மர்ம விலங்கு புகுந்து கோழிகளை கடித்து குதறி கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சதீஸ் அந்த பகுதி அருகே அமைந்துள்ள சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து மர்ம விலங்கின் கால் தடம் பதிந்து கிடக்கிறதா? என்று சோதனை செய்தனர். மேலும் உண்மையில் மர்ம விலங்கு புகுந்து கோழிகளை கடித்து கொன்றதா? அல்லது தெருநாய்கள் பண்ணைக்குள் புகுந்து கோழிகளை கொன்றதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.