யுஏஇ துபாயில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இந்தப்போட்டியில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங்கை துவக்கிய பெங்களூரு அணியை ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா மிரட்டி எடுத்தார். துவக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் 5 ரன்கள், கேப்டன் விராட் கோலி 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். பெங்களூரு அணி, சீரான இடைவெளியில் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணமே இருந்தது. அதனால், அந்த அணியின் ரன் வேகம் மிக குறைந்தது. அதன்படி நிர்ணையிக்கப்பட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 120 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து 121 ரன்கள் என்ற தன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேவிட் வார்னர் 8 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். விருத்திமான் சஹா 39 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டேவின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தாலும், 26 ரன்களில் அவரும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கனே வில்லியம்சன் 8 ரன்கள், அபிஷேக் சர்மா 8 ரன்கள், ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து போனது. இறுதியாக ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கான 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ஹோல்டர் 26 ரன்கள் மற்றும் அப்துல் சமத் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.