
வேலைகிடைக்காத விரக்தியில், முட்டாள்தனமாக பலபேர் விபரீத முடிவில் ஈடுபடும் நபர்கள் மத்தியில், தனக்கு வேலைக்கிடைத்தும், தன் நேர்த்திக்கடனாக உயிரை கொடுத்த இளைஞரின் முடிவு மூடநம்பிக்கையின் உச்சமாகவே உள்ளது

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேலை கிடைத்தால் நேர்த்தி கடனாக தன் உயிரை தருவதாக வேண்டி, வங்கி மேலாளர் வேலை கிடைத்த 15 வது நாளில் ரயிலில் பாய்ந்து தன் உயிரை மாய்த்து மூடத்தனமாக தன் நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளார் வேடிக்கையான இளைஞர் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம், எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லசுவாமி அவரது மகன் நவீன் வயது 32. இவருக்கு சிறு வயது முதலே தெய்வ பக்தி அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் பொறியியல் படித்து முடித்த பின்னர் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். வங்கி தேர்வுகளும் எழுதிய நிலையில் அவருக்கு எந்த வேலையும் கிடைக்காத காரணத்தால், கடவுளிடம், வேண்டுதலாக தனக்கு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக தந்து தன் நேர்த்தி கடனை செலுத்துவதாக வேண்டியுள்ளார்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடைக்காத அந்த வேலை தற்போது கிடைத்துள்ளது. வங்கி உதவி மேலாளராக கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணி கிடைத்துள்ளது. வேலைக்கு சேர்ந்து 15 நாட்களுக்கு பின் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தவர் அங்கிருந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பரையும் பார்த்து பேசிவிட்டு அதன் பின் தனது சகோதரரிடம் தான் ஊருக்கு வந்துள்ளதாகவும் தொலைபேசியில் கூறியுள்ளார். பின்னர் பேருந்தில் நாகர்கோவில் வந்திறங்கி அங்கிருந்து புத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன் அவர் தனது தாய், தந்தைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் தான் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத காரணத்தால் வேலை கிடைத்தால் காணிக்கையாக தனது உயிரை தருவதாக இறைவனிடம் வேண்டுதல் வைத்ததாகவும், தற்போது நினைத்த வேலை கிடைத்து விட்டதால் அந்த வேண்டுதல் நேர்த்தி கடனை செலுத்தி இறைவனிடம் செல்வதாகவும் அதில் எழுதி வைத்துள்ளார்.

அதேப்போன்று தனது சட்டைப்பையில் தனது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் போன்றவற்றையும் வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோரை தொடர்பு கொண்டு விபரத்தை கூறிய போது, அவர்கள் முதலில் நம்பவில்லை பின்னர் மும்பையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பின்பு தான் மகன் ஊருக்கு வந்த விபரம் தெரிந்து மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வேலைகிடைக்காத விரக்தியில், முட்டாள்தனமாக விபரீத முடிவில் ஈடுபடும் நபர்கள் மத்தியில், வேலைக்கிடைத்தும், நேர்த்திக்கடனாக தன் உயிரை இழந்த இளைஞரின் முடிவு மூடநம்பிக்கையின் உச்சமாகவே கருதப்படுகிறது.
குறிப்பு:
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050