
சமைக்காத இறைச்சியை சாப்பிட்டவர் மூளையில் நாடாப்புழுக்கள் இருந்தது, மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கிழக்கு சீனாவின் ஹாங்க்சோ பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ஸூ ஸோங், அவர் ஒரு மாதமாக தலைவலி, கை கால் வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். அதுவரை மருத்துவமனை செல்லாமல் வலியின் தீவிரம் அதிகரித்த பின்பு மருத்துவரை நாடியுள்ள அவர், தலைவலி தானே என்று மாத்திரை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று நம்பிச் சென்ற அவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்பு, அவர் ஜியாங் ரோங் என்ற தொற்றுநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அப்போதுதான் அவருக்கு நாடாப்புழுக்களால் வயிற்றில் அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின் தீவிர சிகிச்சை அளித்து உடலின் ஒவ்வொரு பகுதியாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் அவருடைய மூளை, மார்புப் பகுதி, நுரையீரல் என்று அனைத்து பகுதிகளிலும் 700-க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக நாடாப்புழுக்கள் அவருடைய உடலை ஆக்கிரமித்திருப்பது நோயாளிக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது. சமைக்காத இறைச்சிகளில் நாடாப்புழுக்களின் முட்டைகள் வாழும். அதை நீங்கள் அப்படியே சாப்பிடும் போது, சமைக்காத இறைச்சி மூலம் புழுக்கள் உடலில் ஊடுருவி பல இடங்களில் பரவி தொற்றுகளைப் பரப்பும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்.