
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 37-வது லீக் ஆட்டம் நேற்று திங்கள் கிழமை நடைபெற்றது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில், 7-விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி அளித்தது. சென்னை அணி தோல்வி அடைந்ததால், நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாயிப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது “முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸ் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சிற்கே அது கை கொடுத்தது. சென்ற நான்கு ஐந்து போட்டிகளில் நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. அணியில் பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு மட்டும் மாறவே இல்லை. லட்சக்கணக்கான ரசிகர்கள் போட்டியை பார்ப்பதால், இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

நாங்கள் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை தான்,எங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களில் நான் பெரிய உத்வேகம் எதையும் பார்க்கவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். அவர்களும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட இது ஒரு வாய்ப்பாக அமையும்” என்றார்.