
தேமுதிக கட்சித்தலைவரும் நடிகருமான திரு விஜயகாந்த் மற்றும் ரஜினியின் மருமகனும் நடிகருமான திரு தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் சுமார் ஒருமணி அளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், நடிகர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார். தனையடுத்து, விருகம்பாக்கம் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது இந்த நிலையில், அடுத்து 20 நிமிடங்கள் கழித்து,

மீண்டும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து, நடிகர் தனுஷ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது, இந்த இரு மிரட்டல்கள் தொடர்பாக விருகம்பாக்கம் மற்றும் அபிராமபுரம் காவல்நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நடந்த விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் கமரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது இவர் ஏற்கனவே புதுச்சேரி முதலமைச்சர் திரு நாராயணசாமி, மற்றும் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் திரு ரஜினிகாந்த், அஜீத் விஜய் உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக ஏற்கனவே மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.