
இந்திய அரசின் ஊக்கத் தொகை திட்டத்தின் அடிப்படையில் 16 கைபேசி நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தியை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவின் நான்கு நிறுவனங்களுக்கும், தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்திற்கும், மற்றும் 5 உள்நாட்டு நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூ 41,000 கோடி திட்டத்தில் நான்கு முதல் 6 சதவீதம் வரை கைபேசி நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் அமெரிக்காவின் ஐபோன் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்களான பாக்ஸ் ஹான் ஹய், ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை தேர்வாகி உள்ளன. மேலும் லாவா, பகவதி (மைக்ரோமாக்ஸ்) ஆப்டிமஸ் எலெக்ட்ரானிக்ஸ், பாட்கெட் எலெக்ட்ரானிக்ஸ், யுடிஎல் நியோலின்க்ஸ் போன்ற இந்திய கைபேசி நிறுவனங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி அடுத்து வரும் 5 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே 10 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கைபேசிகள் அனுமதிக்கப்பட்ட 16 நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப்பெறும் என இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.