ஏப்ரல் 9, 1940 ஆம் ஆண்டில், ஜேர்மன் போர்க்கப்பல் “கார்ல்ஸ்ரூ” நார்வேயின் தெற்கு கடற்கரையில் ஒரு டார்பிடோ தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து மூழ்கியது.
இந்த போர்க்கப்பல் மூழ்கிய இடம் 80 ஆண்டுகளில் யாருக்கும் தெரியாமல் மர்மமாகவே இருந்து வந்தது. பல ஆண்டுகளாகப் பலர் அந்த கப்பலை தேடியும், அந்த கப்பல் எவரின் கண்களுக்கும் சிக்கவில்லை. ஆனால், தற்பொழுது காணாமல் போன அந்த போர்க்கப்பலை அடையாளம் கண்டுள்ளனர்.
ஜேர்மன் கப்பல் நார்வே பீரங்கியால் சேதப்படுத்தப்பட்டது, அடுத்து ஒரு பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ செய்யப்பட்டது. டார்பிடோ என்பது நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படும் ஒரு ஏவுகணையாகும். 80 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே மீதான படையெடுப்பின் போது இந்த போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இப்போது வரை அந்த விபத்தால் மூழ்கப்பட்ட அந்த போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை மேலும் அது அடையாளமும் காணப்படவில்லை.
வரலாற்றுப் புத்தகங்களில் கார்ல்ஸ்ரூவின் தலைவிதியைப் பற்றி நாம் பல செய்திகள் தெரிந்துகொள்ளலாம், ஆனால் கப்பல் எங்கு மூழ்கியது என்பது யாருக்கும் இதுவரை சரியாகத் தெரியவில்லை. மேலும், நார்வே மீதான தாக்குதலின் போது தன் நிலையை இழந்த ஒரே பெரிய ஜெர்மன் போர்க்கப்பல் இதுவாகும். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இந்த முக்கியமான போர்க்கப்பலின் கல்லறை எங்கே உள்ளது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நார்வே கடல்சார் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், துணை ஆராய்ச்சியாளருமான ஃப்ரோட் குவாலே இந்த கப்பலை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வுப் பணிகளின் போது தான் டென்மார்க்குக்கும் நார்வேவுக்கும் இடையிலான ஸ்டாட்நெட்டின் மின் இணைப்பான்களுக்கு அருகில் ஒரு சிதைந்து போன கப்பலை எங்கள் சோனார்கள் கண்டுபிடித்துள்ளது.
இந்த கோடையில், ஸ்டாட்நெட்டின் மூத்த திட்ட பொறியாளர் ஓலே பெட்டர் ஹாபர்ஸ்டாட், தெற்கு நார்வேயில் உள்ள கிறிஸ்டியன்ஸாண்டிலிருந்து 13 கடல் மைல் தொலைவில் காணப்பட்ட மூழ்கிய கப்பலைப் பற்றி மேலும் அறிய முயன்றிருக்கிறார். “ஒலிம்பிக் டாரஸ் (Olympic Taurus)” என்ற கடல் கப்பலில் இருந்து, மர்மமான சிதைவை ஆராய ROV – ரிமோட்டில் இயக்கப்படும் நீர்முழ்கி வாகனம் மற்றும் மல்டி பீம் எதிரொலி அலைகள் மூலம் அந்த கப்பலை ஆராய்ந்துள்ளார்.
ROV முடிவுகள் டார்பிடோ செய்யப்பட்ட ஒரு கப்பலைக் காட்டியபோது, அது போரிலிருந்து வந்தது என்பதை நாங்கள் உணர்ந்தோம். ROV கேமராக்கள் பீரங்கிகளை காட்டியதும், மூழ்கடிக்கப்பட்டிருப்பது ஒரு பெரிய போர்க்கப்பல் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். சேதமும் மிகவும் பெரியது என்பது எங்கள் வீடியோவில் மிக தெளிவாகத் தெரிந்தது என்று ஆராய்ச்சியாளரான ஹோபர்ஸ்டாட் கூறியுள்ளார்.
174 மீட்டர், அதாவது 571 அடி நீளம் கொண்ட இந்த கார்ல்ஸ்ரூ போர்க்கப்பலில் பெரிய நீராவி விசையாழிகள் மற்றும் ஒன்பது பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தது, கார்ல்ஸ்ரூ கப்பல் ஏப்ரல் 9ம் தேதி, 1940 வருடத்தில் போரில் ஆபரேஷன் வெசெரபூங்கின்(Weserübung) போது கிறிஸ்டியன்ஸான்ட் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு இந்த போர்க்கப்பல் தலைமை தாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலான ட்ரூயண்ட், டார்பிடோவால் கார்ல்ஸ்ரூவைத் தாக்கி நீரில் மூழ்கடித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் சோனார் வழியாக ஒரு வழக்கமான கணக்கெடுப்பை மேற்கொண்டபோது இதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஜூன் மாத இறுதி வரை கப்பலின் அடையாளம் ஒரு மர்மமாகவே இருந்து வந்துள்ளது, ROV கைப்பற்றிய புகைப்படங்கள் அதன் ஹல், துப்பாக்கி கோபுரங்கள் மூலம் அந்த கப்பல் கார்ல்ஸ்ரூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்பொழுது இது சுமார் 1,500 அடி ஆழத்தில் மூழ்கி கடல் அடியில் இருப்பது தற்போது வெளி உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொல்பொருள் ஆய்வாளர் கூறுகையில், “ஒன்பது பீரங்கிகளின் பிரதான பேட்டரியுடன் இருக்கும் இந்த போர்க்கப்பல் கிறிஸ்டியன் சாண்டிற்கு எதிரான தாக்குதல் குழுவில் மிகப்பெரியது மற்றும் மிகவும் பயமுறுத்தும் கப்பலாக இருந்து வந்துள்ளது. தற்பொழுது நார்வே கடலோர நிர்வாகம் இப்போது இந்த கப்பலைக் கண்காணித்து வருகிறது, ஏனெனில் அதில் இன்னும் ஒரு மில்லியன் லிட்டர் எரிபொருள் மற்றும் உலகை அழிக்க விளைவிக்கும் பல இரசாயன அணுகுண்டுகள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகக் அவர்கள் கூறியுள்ளனர்.