அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் பேச்சுக்கள் அடங்கிய ரகசிய டேப்பை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. அதில் அவர் இந்திய பெண்களை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.
இந்த பேச்சுக்களை பற்றி வரலாற்றாசிரியர் கேரி ஜெ. பாஸ் என்பவர் நியூயார்க் டைம்ஸ் இதழில் கட்டுரையாக எழுதியுள்ளார். இவர் வங்கதேசம் உருவாக காரணமான, 1971 இந்தியா – பாகிஸ்தான் போர் பற்றியும், அதில் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் இனவெறுப்புடன் நடந்து கொண்டதையும் அதில் விவரித்தவர். நிக்சன் அமெரிக்காவின் 37-வது அதிபராக 1969 முதல் 1974 வரை பொறுப்பு வகித்தவர். சர்ச்சை ஏற்படுத்தியுள்ள இந்த இரகசிய உரையாடல்கள் அடங்கிய டேப், முன்னாள் அதிபர் நிக்சனின் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஆப்பிரிக்க கறுப்பின பெண்களுடன் இந்திய பெண்களை ஒப்பிட்டு, அவர்களிடமாவது சிறிதளவு வசீகரம் இருக்கிறது. இந்திய பெண்கள் பரிதாபகரமானவர்கள் என கூறியுள்ளதாக பாஸ் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் இந்தியா சோவியத் யூனியனுடன் நெருக்கமாக இருந்தது. பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரம் அமெரிக்காவை ஆதரித்து வந்தது. அதனால் இந்தியர்களுக்கு எதிராக நிக்சன் இருந்ததாக பாஸ் கூறியுள்ளார். அதனால் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட வன்முறையை அவர் கண்டுகொள்ளவில்லை.
ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான வங்காள மக்கள் கொல்லப்பட்டதை நிக்ஸன் ஆதரித்தார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்திய பெண்கள் பற்றி ஆபாச கருத்துக்களையும் அந்த உரையாடலில் நிக்சன் கூறியுள்ளார். உலகிலேயே இந்திய பெண்கள்தான் கவர்ச்சி குறைவானவர்கள். பாலுணர்வு அற்றவர்கள். அவர்கள் எப்படி பிள்ளை பெறுகிறார்கள் என பேசியுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த ரகசிய ஆடியோ டேப் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.