தேனி மாவட்டம் அருகே, திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட தன் மகளுக்கு தந்தை ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள வேப்பம்பட்டியைச் சார்ந்தவர் ஜெயபால். இவர் பெங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் கீர்த்தனா என்பவர் பேஷன் டிசைனிங் படித்துள்ளார். பண்ணைபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 2 -ம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், உறவினர்கள், நண்பர்களுக்கு ஜெயபால் திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சென்ற ஆகஸ்ட் 28 – ம் தேதி பால் வாங்கி வருகிறேன் என்று வீட்டைவிட்டுக் கிளம்பிய ஜெயபால் மகள் கீர்த்தனா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
குடும்பத்தினர் அனைவரும் பதறி போய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணையில், கீர்த்தனா வேப்பம்பட்டியைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞரைத் திருமணம் செய்து கொண்டது அதன்பிறகு தெரியவந்தது. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த இந்நிலையில், மகள் காதல் திருமணம் செய்துகொண்டது ஜெயபாலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், ஆத்திரமடைந்த தந்தை ஜெயபால், தன் மகள் கீர்த்தனா மரணமடைந்து விட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார்.
தன் மகள் உயிரோடு இருக்கும் போதே வேறு ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், தன், உயிரோடு இருக்கும் மகளுக்கு தந்தையே இறந்துவிட்டார் என்று கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியிருப்பது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.