
சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் இந்திய தர நிர்ணய ஆணை விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்தால் மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் இந்தியாவின் தர நிர்ணய ஆணைய அலுவலர்கள் பரிசோதித்த பின்னரே இனி அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இந்த செயல் முறை வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பொம்மைகள் இந்திய தரக்கட்டுப்பாடு ஆணை 2020 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பிரமோத் திவாரி கூறுகையில், நம் நாட்டில் சுமார் 268 தர கட்டுப்பாடுகள் உள்ளன. முக்கிய துறைமுகங்களில் பி. ஐ. எஸ். எஸ் ஊழியர்கள் துறைமுகத்திலேயே மாதிரிகளை எடுத்து தயாரிப்புகளை சோதிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த தரப்பரிசோதனை குறித்து ராம்விலாஸ் பஸ்வான், இந்த தரப்பரிசோதனை முறை வரும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும், இது இரு நிலைகளில் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். சீன நாட்டில் இருந்து பெரும்பாலான பொம்மைகள் இறக்குமதி ஆகும் நிலையில் இந்த அறிவிப்பு அதிமுக்கிய கவனத்தை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.