எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை எந்த நாடு மேற்கொண்டாலும் தக்க பதிலடி கிடைக்கும் என நமது வீரர்களின் மகத்தான தியாகம் வெளிப்படுத்தி இருக்கிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். தேசத்தின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன். 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பாண்டு கொரொனா வைரஸ் பாதிப்பால் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா போர்க்களத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் வணக்கங்களை செலுத்துகிறேன். மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரிவினைகள் பற்றி எல்லாம் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கவலை கொள்ளவில்லை.
அனைவரையுமே கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா வைரஸை திறம்பட எதிர்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் காலம் நமக்கு பலவித பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் தேவையை கொரோனா காலம் நமக்கு உணர்த்தி இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையானது புதிய இந்தியாவை கட்டி எழுப்புவதற்கு உதவும்.
புதிய கல்வி கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தமது தனித்தன்மையை இழக்காமல் உலக பொருளாதாரத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். தற்சார்பு என்பது உலக பொருளாதாரத்தில் இருந்து துண்டித்துக் கொள்வதும் இல்லை. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.