
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் 1,6,9-ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதுபோல 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்; தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக்கேட்டு, அதன்பின்னர் அனைத்துத் துறைகளுடன் முதல்வர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றார்.