இந்திய தேசியக்கொடி அச்சிடப்பட்ட முகக் கவசங்கள் பிரபல இணைய வழி சந்தைகளில் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கு சூழலில் சமூக இடைவெளியுடன் சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட அரசும் மக்களும் தயாராகி வரும் இந்நிலையில், முகக் கவசங்களில் இந்திய தேசியக் கொடியை அச்சிட்டு விற்பனை செய்வதையும் மற்றும் அதை அணிவதையும் தடை செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் புகார் கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசின் அறிவிப்பாலும், அபராதம் விதிக்கப்படுவதாலும் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவதை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். மக்களின் விலைக்குவாங்கும் சக்தி, ரசனைகளுக்கேற்ப முகக் கவசங்கள் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய தேசியக்கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பரபரப்பு எழுந்துள்ள இந்த நிலையில், முகக் கவசம் பற்றி புகார் அனுப்பியுள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமியிடம் கூறியபோது, ‘சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாட உள்ள நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்க கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்கிற அரசின் உத்தரவைப் பயன்படுத்தி, நமது இந்திய தேசியக் கொடியை முகக்கவசங்களில் அச்சிட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவது பேர் அதிர்ச்சியளிக்கிறது.
வணிக ரீதியில் தேசியக்கொடியின் வர்ணத்தை முகக் கவசத்தில் அப்படியே அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆர்வத்துடன் வாங்கும் பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு குப்பைகளிலும் சாலை ஓரங்களிலும் தூக்கி எறிந்துவிடுவார்கள். இது எவ்வளவு பெரிய துயரம். இதுதான் தேசியக்கொடிக்கு நாம் கொடுக்கும் மரியாதையா? முகக்கவசங்களைப் பத்திரமாக வீட்டிலேயும் வைத்திருக்க முடியாது.
இது நம் இந்தியதேசியக்கொடியை அவமதிக்கின்ற நிலையை ஏற்படுத்தும். எனவே, தூக்கி வீசப்படுகின்ற முகக் கவசங்களில் இந்திய தேசியக்கொடியை அச்சிட்டு விற்பனை செய்ய காவல்துறையினர் கூடிய விரைவில் தடை விதிக்க வேண்டும். அத்துடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அவ்வகையான முகக் கவசங்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். வணிக நலனுக்காக இதுபோன்று தூக்கி எறியப்படும் பொருள்களில் மதிப்பு வாய்ந்த நம் இந்திய தேசியக்கொடியின் வடிவங்களை அச்சிடக் கூடாது என்று அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
தற்போது இதுபோன்ற நம் தேசியக்கொடி அச்சிடப்பட்ட முகக் கவசங்கள் பிரபல இணைய வழி சந்தைகளிலும் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.