கார்டியர் (Cartier) என்ற பிரான்ஸ் தங்கநகை நிறுவனம் உலகம் முழுவதும் தங்கள் கிளையைப் பரப்பி உள்ளது. சீனாவிலும் இந்த நகை கடையின் கிளைகள் உள்ளன. இந்த நகை கடை சமீபத்தில் ஓரு விளம்பரத்தை வெளிவிட்டது.
அது தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த சர்ச்சையை சீனாவில் மீண்டும் கிழப்பியுள்ளது. உலகம் முழுவதும் எல்ஜிபிடிக்யூ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என அவர்கள் உலகத்தில் அந்தந்த நாட்டு அரசுகளிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர். தற்போது உள்ள விஞ்ஞான உலகத்தில் இவர்களது கோரிக்கையும் பல நாட்டு அரசுகளால் ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் சென்ற 2001-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் சமூகத்தில் மற்ற குடிமக்களோடு இணைந்து பாகுபாடின்றி வாழ சீன அரசு வழிவகை செய்தது. 2001-ஆம் ஆண்டுக்கு முன்னர் சீனாவில் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் இருந்தார்கள். ஓரினச்சேர்க்கை அமைப்பினரின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த சட்டம் நீக்கப்பட்டு அவர்கள் ஒன்றாக வாழ சீன அரசு அனுமதி வழங்கியது.
ஆனாலும் தொடர்ந்து சீனாவில் சென்ற 20 ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கையாளர்கள் பொதுமக்களால் ஒதுக்கப்பட்டே வருகின்றனர். ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்க்கை குறித்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீனாவில் ஒளிபரப்பாகியது. ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு இதற்கு சீன கம்யூனிச அரசு இந்நிகழ்ச்சிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. எந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும், திரைப்படங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரித்து படம் எடுக்கக்கூடாது என சீன அரசு உத்தரவிட்டது.
மேலும் தனியார் நிறுவன விளம்பரங்களிலும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கக்கூடாது என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது பிரான்ஸ் நாட்டின் கார்டியர் நகைக்கடை நிறுவனம் ஒரு நிமிடத்துக்கு ஓரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் இந்த நகை கடையின் மோதிரத்தை அணிந்து சைக்கிளில் வலம் செல்கின்றனர்.
இவர்கள் இருவரும் தந்தை-மகன்போல அந்த விளம்பரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விளம்பரம் வெளியான சில நிமிடங்களிலேயே டுவிட்டரில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியது. இவர்களைப் பார்த்தால் தந்தை-மகன் போன்று இல்லை. இவர்கள் அணிந்திருப்பது கப்புள்ஸ் ரிங் எனப்படும் தம்பதிகள் அணியும் மோதிரம். ஆக, இந்த நகைக்கடை நிறுவனம் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கிறது என சமூக வலைதளங்களில் மிக சூடான விவாதம் நடைபெற்றது. இது தற்போது சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில் டுவிட்டரில் இந்த விளம்பரத்திற்கு 4,500 லைக்குகளுக்கு அதிகமாகவும் 1,100 கமெண்டுகளுக்கு மேலும் வந்துள்ளன. சீனாவில் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் பலர் இந்த விளம்பரத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சீனா விதித்த கட்டுப்பாட்டை மீறி இந்த விளம்பரம் வெளியாகி இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் எனவும் சில சீன மக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி சீன அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.