பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, முதன்முறையாக மாணவிகளை விட அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் பட்டியலும் இன்று வெளியானது. காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 9,39,829 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 4,68,070 மாணவர்கள், 4,71,759 மாணவிகள் மற்றும் 6,235 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள். இந்த ஆண்டு 100% தேர்ச்சி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.