
கோவிட் – 19 (சீன வைரஸ்) தடுப்பூசியை உருவாக்கும் போட்டிகளுக்கு மத்தியில், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளார், இது உலகின் முதல் தடுப்பூசி என்று கூறப்படுகிறது.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் கடுமையாக மிக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடாக இரஷ்யா உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஓட்டத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய இரஷ்யா, ஆகஸ்ட் 12 ஆம் தேதி க்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் வெளியிட்ட உலகின் முதல் நாடாக இரஷ்யா பதிவு செய்துள்ளது. இரஷ்ய அதிபர் புதின் இதை செய்தியாளர்களிடம் முறைப்படி அறிவித்துள்ளார்.

இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வைரஸ் தடுப்பூசி சோதனை கட்டமாக பொதுமக்களுக்கு போடப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் மற்றும் முதியவர்களுக்கு முதலில் வைரஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது..அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஏற்கனவே இரஷ்யா கூறியிருந்தது.

இந்த நிலையில் கொரோனோவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளோம் என இரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது சொந்த மகளுக்கே புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவிடம் தடுப்பூசி குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட புதின். இது மிகவும் திறம்பட செயல்படுகிறது என்பதும், நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடம்புக்குள் உருவாக்குகிறது என்பதும் தனக்குத் தெரியும் என்று தெரிவித்த்துள்ளார்.

உலகில் முதல் முறையாக, புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது என்று கூறிய புதின், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியில் பணியாற்றிய அனைவருக்கு நன்றி தெரிவித்தார், மேலும் இது உலகிற்கான மிக முக்கியமான முதல்படி என்று அவர் கூறியுள்ளார்.