
மும்பையில் கனமழைக்கு மத்தியில், 50 வயது பெண்மணி ஒருவர், திறந்து கிடந்த பாதாள சாக்கடை அருகே சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் நின்று மக்களை பாதுகாத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 4-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக சாலையெங்கும் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மேற்கு மும்பையில் உள்ள மாதுங்கா பகுதியில், 50 வயதாகும் காந்தமூர்த்தி காலன் என்ற பெண், மழைநீர் தேங்கிய பகுதியில், திறந்து கிடந்த பாதாள சாக்கடை அருகே நின்றபடி வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

தன்னுயிரை துச்சமென கருதி, சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்ற காந்தமூர்த்தி, மாநகராட்சி ஊழியர்கள் வந்த பின்னரே அங்கிருந்து சென்றுள்ளார். எட்டு குழந்தைக்கு தாயான காந்தமூர்த்தி காலன், தனது 5 குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் மீதமுள்ள 3 குழந்தைகள் கல்வி பயில்வதற்கு, சாலையோரம் பூ வியாபாரம் செய்து பிழைத்து வருகிறார்.

சமீபத்தில் பெய்த மழையால், அவரது வீடு மற்றும் உடைமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இது குறித்து காந்தமூர்த்தி கூறுகையில், பூ வியாபாரம் மூலம் எனது மூன்று குழந்தைகளின் கல்விக்கு செலவிட்டு வருகிறேன். ரயில்வே விபத்தை சந்தித்த பின்னர் என் கணவர் முடங்கிப்போயிருப்பதால் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினராக இருக்கிறேன்.

திறந்திருந்த பாதாள சாக்கடை அருகே நின்று வாகனங்களை எச்சரிக்க நின்றேன். பின்னர் அங்கே வந்த மாநகராட்சி அதிகாரிகள் என்னை திட்டினர். இதுபோன்ற சூழ்நிலைகளில், இதனை சாதாரண விஷயம் என்று தான் நினைத்தேன். இல்லையெனில் மக்கள் விபத்தை சந்தித்திருக்கலாம் என கூறியுள்ளார்.