பழைய வால்வு ரேடியோ மற்றும் டிவி-களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு மிக்க தங்கத்தை ஈர்க்கும் வேதித் தனிமமான சிகப்பு பாதரசம் இருப்பதாக கூறி தமிழகத்தில் மோசடி கும்பல் ஒன்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கவுண்டமணி நடித்த திரைப்படம் ஒன்றில் பழைமையான ஓட்டகாலணாவைத் தேடி அலையும் காமெடி காட்சி மிகவும் பிரபலம், அதே பாணியில் சிவப்பு பாதரசத்திற்கு கோடிக் கணக்கில் மதிப்பு என்று யாரோ பரப்பிய வதந்தியை உண்மை என்று நம்பி இடைத்தரகு கும்பல் ஒன்று ஊர் ஊராகத் தேடி அலைந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிவப்பு பாதரசத்தை தேடி வந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள், தற்போது நகர்ப்புறங்கள் தொடங்கி கிராமப்புறங்கள் வரை உள்ள பெரும்பாலான ரேடியோ மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகளுக்கு நேரடியாக படையெடுத்து வருகின்றனர்.
மரத்தாலான பழைய வால்வு ரேடியோவிலும், கதவு பொருத்தப்பட்ட பழைய சாலிடர் டிவியிலும் சிவப்பு பாதரசக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அது அணு ஆயுதம் செய்யப் பயன்படுத்தப்படும் தனிமம் என்றும், வீட்டில் இருந்தால் பணமும் நகையும் பெருகும், பிரச்சனைகள் எல்லாம் விலகும் என்றும் ஆளுக்கு தகுந்தாற்போல் விதவிதமாக கதையளந்து வருகின்றது ஒரு மோசடிக்கும்பல். அந்த சிவப்பு பாதரசக் குப்பிகளுக்கு கோடிக் கணக்கில் பணம் தருவதாக வாயில் இருந்து வரும் வார்த்தைகளால் வடை சுட்டு செருப்புத் தேய கடை கடையாய் நடந்து வருகின்றனர்.
சிறுவர்கள் காந்தத்தை வைத்து விளையாட்டுக் காட்டுவது போல, பழைய வால்வு ரேடியோக்களில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு வண்ண பாதரசக் குப்பி என்று கூறி அது தங்கத்துடன் ஒட்டிக் கொள்வதாகவும், வெள்ளைப் பூண்டுடன் ஒட்டாமல் விலகிச்செல்வதாகவும், கண்ணாடியில் அது தெரியாமல் மறைவது போலவும் வீடியோவாக தயார் செய்து வைத்துக் கொண்டு, தங்களிடம் சிவப்பு பாதரசம் விற்பனைக்கு உள்ளது என்று சமூக வலைதளங்களில் சில மோசடி பேர்வழிகள் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே சிவப்பு பாதரசம் எந்த நேரத்திலும் ரேடியோவிலும் டிவியிலும் பயன்படுத்தபடவில்லை என்றும் மோசடி ஆசாமிகள் செய்து காட்டும் கண்கட்டுவித்தைகளை உண்மை என்று நம்பி பணத்தைப் பறிகொடுத்து விட வேண்டாம் என்று பகிரங்கமாகவே அறிவிப்புகளை சீனியர் மின்சாரப் பழுது நீக்குவோர் வெளியிட்டு வருகின்றனர். காரணம், எந்த ஒரு ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக்கிடம் இருந்தும் இந்த சிவப்பு பாதரசக் குப்பியை பணம் கொடுத்து வாங்கியதாக இதுவரை தகவல் இல்லை.
எனவே மக்களிடம் அதனை பேசு பொருளாக்கி பெரிய அளவில் பணத்தை ஏமாற்றி செல்ல திட்டமிட்டுள்ள மோசடிக் கும்பலின் பரப்புரை என்று சுட்டிக்காட்டும் போலீசார், முன்பெல்லாம் ஆண்மை விருத்தி மருந்துக்கு மண்ணுளிப் பாம்பு, ரைஸ்புல்லிங்கிற்கு கோவில் கலசம் , இரிடியத்திற்காக பெட்ரமாக்ஸ் லைட் என தேடி அலைந்த மோசடிக் கும்பல், தற்போது அதன் கவனத்தை தங்கத்தை கவர்ந்திழுக்கும் சிவப்பு பாதரசம் பக்கம் திருப்பியுள்ளது என்கின்றனர்.
இத்தகைய மோசடிக் கும்பல் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரும் சிவப்பு பாதரசத்தை நம்பி பணம் கொடுத்து வாங்கி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். கேட்பவர்கள் ஏமாளிகளாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். உஷாராக இருந்தால் இதுபோன்ற மோசடியில் சிக்காமல் பணத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.