இந்தியாவின் முதல் கழுதைப் பால் பண்ணை ஹரியானாவின் ஹிசார் பகுதியில் திறந்து வைக்கப்படுகிறது. இங்கு ஒரு லிட்டர் கழுதைப் பால் 7000 ரூபாய்க்கு விற்கப்படலாம் என அனுமானிக்கப்படுகிறது.
இந்தியாவில் பசு, எருமை மற்றும் ஆடு போன்ற வீட்டு விலங்குகள் அவற்றின் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் என்.ஆர்.சி.இ. எனப்படும் குதிரை, கழுதை உள்ளிட்ட விலங்குகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய ஆராய்ச்சி மைய அமைப்பு, ஹரியானாவின் ஹிசார் பகுதியில் கழுதைப் பால் பண்ணையை துவக்க திட்டமிட்டுள்ளது.
அதன்மூலம் “ஹலாரி” எனப்படும் ஒரு வகையான கழுதை இனத்தின் பாலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக என்.ஆர்.சி.இ. 10 ஹலாரி கழுதைகளை வாங்கி இனப்பெருக்கம் செய்து வருகிறது. இந்தக் கழுதைகளின் பால் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய், உடல் பருமன், ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்களை எதிர்த்து போராடும் திறன் பெற்றது. சிறிய குழந்தைகளுக்கு பசு மற்றும் எருமைப் பால் மூலம் வயிற்று ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம்.
ஆனால் ஹலாரி கழுதைகளின் பால் இந்த வயிற்று ஒவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தாது. இப்படி மருத்துவ நற்குணங்களை கொண்டுள்ள இந்த கழுதையின் பால் ஒரு லிட்டர் 2000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது. கழுதைப் பால் மூலம் தயாரிக்கப்படும் அழகுசாதன பொருள்களின் விலையும் அதிகம். இது சோப், லிப், பாம், பாடி லோஷன் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.