ஹரியானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 2 மதிப்பெண் மட்டுமே பெற்ற மாணவி மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்ததன் மூலம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில், ஹிசார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாஜூராம் என்பவரின் மகள் சுப்ரியா, கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். பாதியளவு பார்வை குறைபாடுள்ள இந்த மாணவிக்கு கணிதத்தில் 2 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே கணித ஆசிரியரான சுப்ரியாவின் தந்தை, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார்.
தற்போது மறுகூட்டலின் மூலம் சுப்ரியாவுக்கு கணிதத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இது குறித்து சுப்ரியா கூறுகையில், எனக்கு கணிதத்தில் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததல் கவலையாக இருந்தது. எனது தந்தை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததன் மூலம் எனக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. எனக்கு நடந்ததுபோன்று வேறு எந்த மாணவிக்கும் நடக்காமல் இருக்க கல்வி வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.