
துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகியதில் விமானி உயிரிழந்தார். அவர் மிகவும் கைதேர்ந்த விமானியாவார்.

கொரோனா பரவலால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாட்டுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் துபாய், சவூதி உள்ளிட்ட நாடுகளில் இருந்த இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலமாக தாயகம் கொண்டு வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் துபாயில் 184 பயணிகள் உள்பட விமான பணியாளர்கள் என மொத்தம் 191 பேரை அழைத்து கொண்டு கோழிக்கோடு நகருக்கு இந்த விமானம் தரையிறங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவே வெள்ளகாடாக காட்சியளிக்கும் நிலையில் கனமழையால் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் எதிர்பாராதவிதமாக சறுக்கிக் கொண்டு 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதனால் விமானமே இரண்டாக பிளந்தது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது பெயர் தீபக் வசந்த் சாத்தே. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடன் இருந்த மற்றொரு விமானி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அவரும் இறந்துவிட்டார். விமானிகள் இருந்த காக்பிட் அறையும் , விமானத்தின் முன்கதவும் கடுமையாக சேதமடைந்தது. தீபக் மிகவும் கைதேர்ந்த விமானி என கூறப்படுகிறது. இவர் விமான படையின் முன்னாள் விங் கமாண்டராக இருந்தார். கேப்டன் தீபக் சாத்தே விமான படையின் முன்னாள் விமானியாவார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இயக்குவதற்கு முன்னர் சாத்தே ஏர் இந்தியாவின் ஏர் பஸ் 310-ஐயும் இயக்கிய அனுபவம் உடையவர். அதன் பின்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 737 விமானத்தை இயக்கி வந்தார். இவர் விமான படை அகாதெமியின் விருதை பெற்றுள்ளார். போர் விமானங்களை இயக்குவதிலும் நிறைந்த அனுபவம் மிக்கவர். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெஸ்ட் பைலட்டாகவும் இருந்துள்ளார்.