நெதர்லாந்து தலைநகரமான ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஐபிசா தீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பயணிகளை மற்ற பயணிகள் சேர்ந்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச விமானப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இருப்பினும் சில நாடுகள் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.
அந்த சிறப்பு விமானங்களில் பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நெதர்லாந்து தலைநகரமான ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயினின் ஐபிசா தீவுக்கு கே.எல்.எம் என்ற சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியும் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு பயணிகள் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர். இதனைப்பார்த்த சக பயணிகள் அவர்களை முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்களில் மது குடித்தியிருந்த ஒரு பயணி, முகக்கவசத்தை அணிய மறுத்தது மட்டுமல்லாமல் சக பயணிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கொதித்து ஆத்திரமடைந்த மற்றப்பயணிகள் அந்த பயணியை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். நடுவானில் விமானத்தில் நடந்த இந்த சண்டைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையிறங்கியதும் முகக்கவசம் அணிய மறுத்த அந்த பயணிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.