
தான்சானியாவில் கடந்த ஜூன் மாதம் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை கண்டறிந்து ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி மீண்டும் ஒரு அரிய கல்லை கண்டறிந்துள்ளார்.

அதை 20 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ஆகும். சானினியூ லாய்ஜெர் என்னும் அந்த சுரங்க முதலாளி ஜூன் மாதம் 15 கிலோ எடை கொண்ட ரத்தினக் கற்களை கண்டறிந்தார் பின் அந்த நாட்டின் சுரங்க அமைச்சகத்துக்கு அதை விற்றதில் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய் அவருக்கு கிடைத்தது.

அவர் கண்டெடுத்துள்ள டான்சனைட் கல்லின் எடை 6.3 கிலோ கிராம். டான்சானைட் ரக ரத்தினக் கற்கள் வடக்கு தான்சானியாவில் மட்டுமே கிடைக்கும். இவை பொதுவாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூமியில் கிடைக்கக் கூடிய மிக அபூர்வமான ரத்தினக் கற்களில் இதுவும் ஒன்று. அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த ரக கற்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

விலைமதிப்புமிக்க இந்தக் கற்களில் பச்சை, சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் நீலம் என பல வகையான நிறங்கள் இருப்பது தான் இவற்றின் சிறப்பம்சம். இதன் விலையும் அபூர்வத்தன்மையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. நிறம் எவ்வளவு தெளிவாக உள்ளதோ அதற்கேற்ப விலையும் அதிகமாகும். டான்சானைட் கற்கள் வடக்கு தான்சானியாவில் மட்டுமே கிடைக்கின்றன.

52 வயதான லாய்ஜெருக்கு நான்கு மனைவிகள் உள்ளனர். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். முதல்முறை டான்சானைட் கற்களை கண்டறிந்த சமயத்தில் பிபிசியிடம் பேசியபோது “நாளைக்கு ஒரு பெரிய விருந்து இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்த பணத்தை கொண்டு தான் இருக்கும் சிமாஞிரோ மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்றையும், மருத்துவமனை ஒன்றையும் கட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திடீர் பண மழையால், தன்னுடைய வாழ்க்கை முறை மாறிவிடாது என்றும் தனது 2,000 பசுக்களை பராமரிக்கும் தொழிலை தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவர் முன்னதாக தெரிவித்திருந்தார். லாய்ஜெர் போன்ற சிறிய அளவிலான சுரங்க முதலாளிகள், அரசிடம் இருந்து உரிமம் பெற்று டான்சானைட் வெட்டுகிறார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமான சுரங்கங்களுக்கு அருகில் சட்டவிரோத சுரங்கங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மன்யாராவில் மேரெலானி சுரங்கப் பகுதியில் 24 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுவர் எழுப்புமாறு 2017-இல் ராணுவத்துக்கு அதிபர் முகுஃபுலி உத்தரவிட்டார். டான்சனைட் கிடைக்கும் ஒரே பகுதி அதுதான் என்று கருதப்படுகிறது. ஓராண்டு கழித்து, சுரங்கத் துறை மூலம் அரசின் வருவாய் பெருகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சுவர் கட்டப்பட்டதால் தான் அரசின் வருவாய் பெருகியதாக கூறப்பட்டது என்று பிபிசி செய்தியாளர் சம்மி அவாமி கூறுகிறார்.