
கொரோனா லாக்டவுன் காலத்தில் வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை கட்டணத்தை உரிமையாளர்கள் வசூலிக்க கூடாதென வழக்கு தொடரப்பட்டது.

அதை தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் அபாராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் அறிவித்துள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து நிலம், வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.

ஆனால் பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையைகூட வசூல் செய்துள்ளனர். வாடகை செலுத்தாதவர்கள் காலி செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று காலத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் நோய் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசும் ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிட்டது. ஆகவே, பெருந்தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் , ஹேமலதா அமர்வு இது சாத்தியமில்லை என்றும் இதே போல தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் முன்பு வாடகைதாரர் வீட்டு உரிமையாளர்கள் யாரும் வழக்குத் தொடரவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது பொதுநல வழக்கு ஆகாது என்றும் தெரிவித்தனர்.

மேலும் அரசினுடைய அறிவிப்பு தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாகவும், மனுதாரருக்கு அபராதமும் விதிக்கப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து வழக்கு நாளை ஒத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டதைதொடர்ந்து வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது.